மும்பை,
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளின் முடிவிலேயே நியூசிலாந்து தொடரை கைப்பற்றி இந்திய மண்ணில் வரலாறு படைத்து விட்டது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 235 ரன்களும், இந்தியா 263 ரன்களும் அடித்தன.
பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி இந்தியாவின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 174 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக வில் யங் 51 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதனையடுத்து 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.
முன்னதாக இந்த தொடரில் (3 போட்டிகள்) நியூசிலாந்து 31 சிக்சர்களை நொறுக்கியுள்ளது. இதன் மூலம் இந்திய மண்ணில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த 2-வது வெளிநாட்டு அணி என்ற ஆஸ்திரேலியாவின் மாபெரும் சாதனையை நியூசிலாந்து சமன் செய்துள்ளது. இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் 32 சிக்சர்களுடன் முதலிடத்தில் உள்ளது.