காசா மீது தாக்குதல்: போலியோ முகாமுக்கு வந்த குழந்தைகள் உள்பட 6 பேர் காயம்; உலக சுகாதார அமைப்பு கண்டனம்

ஜெனீவா,

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தி பலரை கொன்றும், பணய கைதிகளாக பிடித்து சென்றதற்கும் பதிலடி கொடுக்கும் வகையில் காசா மீது இஸ்ரேல் பாதுகாப்பு படை தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதில், ஹமாஸ் அமைப்பினர் மற்றும் பாலஸ்தீனியர்கள் என ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தும் உள்ளனர்.

இந்த சூழலில், காசாவில் உள்ள குழந்தைகளுக்கு அவர்களுடைய நலன்களை கவனத்தில் கொண்டு போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்களை நடத்த முடிவானது. இதன்படி, காசாவின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் 2 கட்ட சொட்டு மருந்து முகாம் நடத்தியதில், 4,51,216 குழந்தைகள் பலன் பெற்றுள்ளனர். இது இந்த பகுதிகளில் 96 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

இந்த சூழலில், 3-வது கட்ட சொட்டு மருந்து வழங்கும் முகாம்களை நடத்த முடிவானது. கடந்த அக்டோபர் 23-ந்தேதி நடக்க இருந்த இந்த முகாம் பின்னர் தள்ளி வைக்கப்பட்டது. இதன்படி, நேற்று இந்த முகாம் நடத்தப்பட்டது. இதற்காக, காசாவின் வடக்கே ஷேக் ரத்வான் முதன்மை சுகாதாரநல மையத்தில், தங்களுடைய குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்காக பெற்றோர்கள் சென்றிருந்தனர்.

இந்நிலையில், இந்த மையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 4 குழந்தைகள் உள்பட 6 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு உலக சுகாதார அமைப்பு கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதுபற்றி அந்த அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் வெளியிட்ட செய்தியில், போலியோ சொட்டு மருந்து முகாமுக்காக போர்நிறுத்தம் ஏற்படுவதற்கான ஒப்புதலுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்தில் 4 குழந்தைகள் உள்பட 6 பேர் காயமடைந்து உள்ளனர். இந்த சமீபத்திய தாக்குதல் ஆனது, குழந்தைகளுக்கு சுகாதார பாதுகாப்பு அளிப்பதற்கான புனித தன்மைக்கு தீங்கு ஏற்படுத்துவது ஆகும் என அவர் தெரிவித்து உள்ளார்.

இதனால், இந்த மையத்திற்கு பெற்றோர் வருவதற்கு இடையூறு ஏற்படும். இந்த பகுதியில் போர்நிறுத்தம் ஏற்படுத்தியதற்கான விசயங்கள் மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.