நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்து ஏற்கனவே தொடரை இழந்துள்ள நிலையில், மும்பை டெஸ்ட் போட்டியிலும் தோல்வியடைந்து இந்திய மண்ணில் 0-3 என ஒயிட்வாஷ் செய்யப்பட்டது. கெளதம் கம்பீர் தலைமையில் ஏற்பட்டுள்ள இந்த மோசமான தோல்வி அவரின் தலைமையை பற்றி அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் சொந்த மண்ணில் இப்படி ஒயிட்வாஷ் ஆவது இந்தியாவிற்கு இதுவே முதல் முறை. மேலும் 12 வருடங்களுக்கு பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரையும் இழந்துள்ளது இந்தியா.
2024 டி20 உலக கோப்பை முடிந்த பிறகு, ராகுல் டிராவிட்டிற்குப் பதிலாக கவுதம் கம்பீர் இந்தியாவின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றார். ஆனால் அவரது தலைமையில் சில மறக்க முடியாத மோசமான சாதனைகளை செய்துள்ளார். அடுத்ததாக ஆஸ்திரேலியா மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. அதில் என்ன செய்ய போகிறார்கள் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தலைமையில் இந்திய அணி இதுவரை செய்த 3 மோசமான சாதனைகளை செய்துள்ளது.
24 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் தோல்வி
கௌதம் கம்பீரின் தலைமையின் கீழ் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. மேலும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் நியூசிலாந்து அணியிடம் ஒயிட்வாஷ் ஆனது. டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் சாதனை படைத்துள்ளது. பெங்களூரு மற்றும் புனே டெஸ்ட்டில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், மும்பையில் நடந்த மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது. இதற்கு முன்பு 2000-ம் ஆண்டு சொந்த மண்ணில் இந்தியா ஒயிட்வாஷ் செய்யப்பட்டது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் தொடரை இழந்தது
தோனிக்கு பிறகு விராட் கோலி இந்தியாவின் டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். அவரது தலைமையில் இந்தியா அசைக்க முடியாத அணியாக இருந்தது. குறிப்பாக சொந்த மண்ணில் ஒரு அதிகார மையமாக மாறியது. விராட் கோலியின் தலைமையின் கீழ் இந்திய அணி ஒரு சொந்த டெஸ்ட் தொடரை கூட இழக்கவில்லை. விராட் கோலி கேப்டன்சியில் இந்தியா 2 போட்டிகளில் மட்டுமே தோல்வியை தழுவி உள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு தோனி தலைமையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா இழந்தது. அதன் பிறகு ஒரு தொடரில் கூட தோல்வி அடையவில்லை. ஆனால் கம்பீரின் தலைமையின் கீழ் தற்போது 12 வருட சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்தது
தலைமை பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பேற்ற முதல் தொடரிலேயே இந்தியா வரலாற்று தோல்வி அடைந்தது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2-0 என்ற அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 30 விக்கெட்களையும் இழந்து, 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. இதனால் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா இழந்தது. முதல் போட்டி டையில் முடிந்த நிலையில் அடுத்த 2 போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது.