சமுர்த்திப் பயனாளர்களாகப் பயன்பெற்றுவருகின்ற, அஸ்வசும நலன்புரித்திட்ட நன்மைகளை இழந்த, ஆனால் உண்மையிலேயே பயனடைய வேண்டிய பெரும் எண்ணிக்கையிலானோர் இருப்பதாக, கிடைக்கப் பெற்ற தகவல்கள் மற்றும் கோரிக்கைகளின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களிடம் சம்பந்தப்பட்ட அமைச்சு மேற்கொண்ட விசாரணைகளிலும் சிக்கல் நிலைகள் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை தயாரிப்பதற்காக விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் ஆலோசனைக்கமைய புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்னவினால் பத்து பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கை பின்வரும் விடயங்களைக் கொண்டிருக்க வேண்டும் எனறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. அஸ்வசும நலன்புரித்திட்டத்திற்கு பயனாளிகளை தெரிவு செய்யும்போது உண்மையிலேயே பயனடைய வேண்டிய ஆனால், அந்த வாய்ப்பை இழந்த சமுர்த்திப் பயனாளர்களைக் கண்டறியும் முறைமை ஒன்றை அமைத்தல்.
2. அஸ்வசும நலன்புரித்திட்டத்திற்கு பயனாளர்களை தெரி செய்யும்போது உண்மையிலேயே பயனடைய வேண்டிய சமுர்த்திப் பயனாளிகளை, அஸ்வசும வேலைத்திட்டத்திற்கு உள்வாங்கப்படாமைக்கான காரணங்களை ஆய்வு செய்து அறிக்கையிடுதல்.
3. உண்மையிலேயே அஸ்வசும நலன்புரித்திட்டத்தினூடாக பயன்பெற வேண்டிய சமுர்த்தி பயனாளர்களை அஸ்வசும வேலை திட்டத்தில் உள்வாங்குவதற்கு, தெரிவு செய்யும் நடைமுறையில் உள்ளடக்கப்பட வேண்டிய பரிந்துரைக்கப்பட்ட அளவுகோள்களை அறிக்கையிடல்
2024 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் முறையான விசாரணையை நடத்தி அறிக்கையை வழங்குமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன, குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.