ம.பி.யில் யானை தாக்கி முதியவர் பலி: 10 யானைகள் பலியான அதே வனப்பகுதியில் நிகழ்ந்ததால் பரபரப்பு

போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் பந்தவர்கர் புலிகள் சரணாலயத்துக்கு வெளியே காட்டு யானை தாக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்தார். அந்தப் பகுதியில் கடந்த 29 ஆம் தேதி தொடங்கி இதுவரை 10 யானைகள் உயிரிழந்த நிலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. யானை தாக்குதலில் உயிரிழந்தவர் ராம்ரதன் யாதவ் (62) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதுகுறித்து பந்தவர்கர் புலிகள் சரணாலய அதிகாரி ஒருவர் கூறுகையில், “இன்று (சனிக்கிழமை) காலையில் காப்புக் காட்டுக்கு வெளியே இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்ற முதியவர் ஒருவரை காட்டு யானைகள் மதித்துக் கொன்றன” என்றார்.

இந்தச் சம்பவத்தை உறுதி செய்த உமாரியா பகுதி வனஅதிகாரி (டிஎஃப்ஓ) விவேக் சிங், “பந்தவர்கர் புலிகள் சரணாலயத்தில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் மூன்று நாட்களில் 10 யானைகள் உயிரிழந்தன. செவ்வாய்க்கிழமை, சரணாலயத்தின் கிடோலி பகுதிக்கு கீழுள்ள சன்ஹானி மற்றும் பகேலி பகுதிகளில் நான்கு யானைகள் இறந்து கிடந்தன. இதனிடையே புதன்கிழமை நான்கு யானைகளும், வியாழக்கிழமை இரண்டு யானைகளும் உயிரிந்தன. 13 யானைகள் கொண்ட குடும்பத்தில் தற்போது 3 யானைகள் மட்டுமே உயிருடன் உள்ளன.” என்று தெரிவித்தார்.

யானைக் கூட்டத்தில் உயிருடன் இருக்கும் யானைகள் அந்த முதியவரைக் தாக்கினவா என்று கேட்கப்பட்டதற்கு, “அதனை உறுதியாக சொல்ல முடியாது. விசாரணைக்கு பின்பே அது தெரியவரும்” என்றார்.

பந்தவர்கர் புலிகள் சரணாலயத்தின் மற்றொரு அதிகாரி கூறுகையில், “அந்த யானைக் குடும்பத்தில் மீதமுள்ள மூன்று யானைகளும் கட்னி மாவட்டத்து வனப்பகுதியை நோக்கி நகர்ந்து வருகின்றன. இந்த நகர்வு வழக்கத்துக்கு மாறானது. பந்தவர்கர் புலிகள் சரணாலயத்தில் கடந்த காலங்களில் இவ்வாறு நடந்தது இல்லை.” என்றார்.

இதற்கிடையே உயிரிழந்த 10 யானைகளின் பிரேதப் பரிசோதனை நிறைவுபெற்றது. 9 யானைகளின் பிரேதப் பரிசோதனை அக்.31 நடைபெற்ற நிலையில், எஞ்சிய ஒரு யானையின் பிரேதப் பரிசோதனை நேற்று (நவ.1) நடந்து முடிந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.