ஒட்டாவா: கனடாவில் பிராம்டன் பகுதியில் உள்ள இந்துக் கோயிலில் பக்தர்கள் மீது காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில் அச்சம்பவத்துக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
“கனடாவின் பிராம்டன் பகுதியில் உள்ள இந்து சபா கோயிலில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் ஏற்கத்தக்கது அல்ல. கனடாவில் வாழும் ஒவ்வொரு நபருக்கும் அவர்கள் விரும்பும் நம்பிக்கையை சுதந்திரமாக, பாதுகாப்பாக பின்பற்றும் உரிமை இருக்கிறது. இந்தச் சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு இந்து சமயத்தினரைப் பாதுகாத்த காவல்துறைக்குப் பாராட்டுகள்” என்று பிரதமர் ட்ரூடோ எக்ஸ் சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
பிராம்டன் கோயிலில் நடந்த தாக்குதலுக்கு இந்து கனடியன் ஃப்வுண்டேஷன் கண்டனம் தெரிவித்துள்ளது. கோயிலில் தாக்குதல் நடந்தபோது பெண்கள், குழந்தைகள் இருந்தனர். ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருந்தால் என்ன செய்திருக்க முடியும் என்று அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
கோயிலில் தாக்குதல் நடத்தியவர்கள் காலிஸ்தான் ஆதரவு கொடிகளை ஏந்தியிருந்தனர். தாக்குதலுக்கு முன்னதாக அவர்கள் 1984 சீக்கிய கலவரத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். திடீரென அவர்கள் இந்துக் கோயிலில் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து பீல் பிரந்திய காவல்துறை தலைவர் நிஷான் துரையப்பா, “கோயில் தாக்குதலால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தணிக்க கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அமைதியான வழியில் போராட எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால் இதுபோன்ற வன்முறை, கிரிமினல் செயல்களை பொறுத்துக் கொள்ள மாட்டோம். இந்த வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்” என்றார்.
இந்தியா கண்டனம்: இந்நிலையில் இந்தச் சம்பவத்துக்கு இந்தியாவும் கண்டனம் தெரிவித்துள்ளது. “இந்துக் கோயிலில் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதுபோன்ற வழக்கமான நிகழ்வுகளுக்கு கனடா அரசு முன்னேற்பாடாக கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்தியிருக்க வேண்டும்” என்று கூறியுள்ளது.
சர்ச்சையின் பின்னணி: இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் எனக் கோரி காலிஸ்தான் உள்ளிட்ட சில பிரிவினைவாத இயக்கங்கள் வெளிநாடுகளில் செயல்பட்டு வருகின்றன. இந்த சூழலில் கனடா நாட்டில் வசித்து வந்த பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார். இதை இந்தியா மறுத்தது.
கனடாவின் குற்றச்சாட்டு குறித்து கடந்த மே மாதம் பதில்அளித்த மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், ”“ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாமீது குற்றம் சுமத்தும் கனடா அரசு,அதற்கான எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை. கனடாவின் உள்நாட்டு அரசியல் காரணமாகவே ஹர்தீப் சிங் கொலை செய்யப்பட்டிருப்பார். அவரது கொலைக்கும் இந்தியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
காலிஸ்தான் ஆதரவாளர்களில் சில பிரிவினர் கனடாவில் தங்களுக்கான வாக்கு வங்கியை உருவாக்கியுள்ளனர். தற்போது ஆட்சியில் இருக்கும் அரசுக்கு பெரும்பான்மை பலம் இல்லை. தவிர, சிலகட்சிகளும் காலிஸ்தான் ஆதரவுதலைவர்களை சார்ந்து இருக்கின்றன. இந்த சூழலில் வாக்கு வங்கியைகுறிவைத்தே நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியா மீது கனடா குற்றம்சாட்டுகிறது” என தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து இருதரப்பு நாடுகளுக்கு இடையிலான உறவு விரிசல் அடைந்தது. இதன் நீட்சியாக தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டு வருகிறது. இது விசா கெடுபிடி, இந்திய மாணவர்களுக்கு நெருக்கடி என்றளவுக்கு நீண்டு கொண்டிருக்கிறது.
அமித் ஷா மீது குற்றச்சாட்டு – பற்றி எரியும் நெருப்பின் மீது எண்ணெய் ஊற்றுவதுபோல், காலிஸ்தான் பிரிவினைவாதிகள் மீது வன்முறை நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டதாக கனடா அமைச்சர் டேவிட் மோரிசன் குற்றம்சாட்டினார். இந்தகுற்றச்சாட்டு அபத்தமானது, ஆதாரமற்றது என்று தெரிவித்துள்ள இந்தியஅரசு, இந்த விஷயத்தில் கனடா தரப்பின் விளக்கத்தை தெரிவிக்குமாறு அந்நாட்டு தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், கனடாவில் பிராம்டன் பகுதியில் உள்ள இந்துக் கோயிலில் பக்தர்கள் மீது காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.