நடிகர் கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கம் மற்றும் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில், மறைந்த இந்திய ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை `அமரன்’ திரைப்படமாக தீபாவளியன்று திரைக்கு வந்தது. இந்தப் படம், வெளியான நாள்முதல் வசூல் ரீதியாக மட்டுமல்லாது விமர்சன ரீதியாக மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.
திரைப் பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில், அமரன் திரைப் படத்தின் வெற்றிவிழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, “முகுந்த் வராதராஜனுக்கும் அவருடைய குடும்பத்துக்கும் நான் நன்றி சொல்லிக்கிறேன். எந்த ஜானர் திரைப்படமாக இருந்தாலும் நேர்மையாக எடுத்தால் மக்கள் அதைக் கொண்டாடுவாங்கன்னு இந்தப் படத்தின் மூலமாக தெரிஞ்சுகிட்டேன். இந்த வெற்றி எனக்கு நம்பிக்கையைக் கொடுத்துருக்கு. இது மாதிரியான் படங்களை அடுத்தடுத்து எடுக்கறதுக்கு நம்பிக்கை இருக்கு. கதாநாயகன் ஓகே சொல்லும்போதுதான் இயக்குநர், தயாரிப்பாளரோட எண்ணத்துக்கு உயிர் கிடைக்குது.
ஒரு ஆதர்ச நாயகனாக சிவகார்த்திகேயன் இருக்கிறது படத்துக்கு பெரிய ப்ளஸ். இந்தப் படத்தோட பின்னணி இசை ஒரு அனுபவமாக இருக்கணும்னு நினச்சேன். அதை அற்புதமாக ஜி.வி. பிரகாஷ் பண்ணிக் கொடுத்திருக்கார். வீரனுடைய கதை ஒரு வீராங்கனையோட பார்வையிலிருந்துன்னு இந்தப் படத்தை பற்றி நான் சொல்வேன். முகுந்த் ஒரு தமிழர். ஒரு தமிழ் ரூட்ஸ் இருக்கிற நடிகரை இந்த படத்தில நடிக்க வைங்கன்னுதான் இந்து சொன்னாங்க. சிவகார்த்திகேயன் வந்தார், அவரோட இருப்பு படத்தோட வெற்றிக்கு முக்கியமானதாக இருக்கு.
தமிழ், தெலுங்குன்னு அத்தனை மொழிகளிலேயும் அச்சமில்லை பாடல் ஒலிக்குது. படத்துக்கு சில விமர்சனங்கள் வந்தது. அதற்கு விளக்கம் இங்கேயே கொடுக்கணும்னு நினைக்றேன். அவங்க குடும்பத்தார் முகுந்த் எப்போதும் இந்தியன்னு அடையாளப்படுத்திக் கொள்ளத்தான் விரும்புவான். அதனால் தமிழன், இந்தியன் என்ற அடையாளம் மட்டும் கொடுங்கன்னு சொன்னாங்க. முகுந்த் அசோக சக்ரா விருது பெற்றிருக்கிறார். அவரோட தியாகத்துக்கு இந்தப்
படம் மரியாதை செலுத்தியிருக்கு நம்புறேன்.” என்று கூறினார்.