புதுடெல்லி: “மத்திய அரசின் ஆத்ம நிர்பார் (சுயசார்பு) திட்டம் எதிர்பார்த்த பலனை வழங்கத் தொடங்கிவிட்டது. சுயசார்பு முயற்சியால் இந்தியாவின் ராணுவ ஏற்றுமதி 2030-ம் ஆண்டில் ரூ.50 ஆயிரம் கோடியைத் தொடும்” என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஐஐடி கான்பூரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற இந்திய இளைஞர்கள் ராணுவப் பயன்பாட்டுக்கான அதிநவீன தொழில்நுட்பங்களை உள்நாட்டிலேயே உருவாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
அந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடி உறுதிபூண்டுள்ளார். இதற்கான திட்டங்களை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. இந்தியா வளர்ந்த நாடாக மாறாக, அனைத்துத் துறைகளிலும் சுயசார்பு அடைவது அவசியம். ராணுவத் தயாரிப்பில் மத்திய அரசின் சுயசார்பு முயற்சி பலன் தரத் தொடங்கி இருக்கிறது. இந்தியா தனக்குத் தேவையான தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. தவிர, வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியும் அதிகரித்து வருகிறது. 2013-14 நிதி ஆண்டில் ராணுவ ஏற்றுமதி வெறும் ரூ.600 கோடியாக இருந்தது. 2023-24 நிதி ஆண்டில் அது ரூ.21,000 கோடியாக உயர்ந்தது. 2030-ம் ஆண்டில் அது ரூ.50,000 கோடியாக உயரும்.
ராணுவத்தில் சுயசார்பை அடைவதில் தடையாக இருப்பது அதிநவீன தொழில்நுட்பங்கள்தான். ராணுவத்துக்கான அதிநவீன தொழில்நுட்பங்களை நாம் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறோம். எனவே இந்திய இளைஞர்கள் ராணுவத்துக்கான அதிநவீன தொழில்நுட்பங்களை உள்நாட்டிலேயே உருவாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்” என்று தெரிவித்தார்.