2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 373 வது வாக்குறுதி ‘தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பவர்களுக்கு அவற்றைப் பராமரிக்க மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும்’ என்பதுதான்.
ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் நிறைவடைய இருக்கும் சூழலில் இதுவரை இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாதது குறித்து ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பவர்கள் பெரிதும் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
நவம்பர் மாதமும் வந்தாச்சு… 2025 பிறக்க இன்னும் ஒரு மாதமே இருக்கும் சூழலில் வரும் பொங்கல் பண்டிகை மற்றும் ஜல்லிக்கட்டின் போதாவது திமுக அரசு இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவார்களா என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் சிலரிடம் பேசினோம்.
”திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த இந்த வாக்குறுதியை எங்க சொந்த மாவட்ட அமைச்சர் ரகுபதி இந்த பகுதியில் ஒரு ஊர் விடாம சொல்லியிருந்தார். ஆனா என்ன காரணம்னு தெரியல. இந்த நாலு வருஷத்துல இது தொடர்பாக வாயே திறக்க மாட்டேங்கிறாங்க. இன்னைக்கு நிலமையில ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கிறவங்களுக்கு குறைந்தபட்சம் ஒரு மாசத்துக்கு ஐயாயிரம் ரூபாய் தேவைப்படுது.
கோதுமைத் தவிடு, புண்ணாக்கு, கடலை உமின்னு இந்த மாதிரியான தீவனங்களைக் கொடுத்தா மட்டும் காளைகள் ஆரோக்கியமா இருக்கும். அதுங்களோட விலையெல்லாம் ரொம்பவே அதிகம். வைக்கோல், புல்லும் முன்ன மாதிரி கிடைப்பதில்லை. சாதாரண மாடுகள் போல இந்த மாடுகளை மேய்ச்சலுக்கு எல்லாம் கொண்டு போகவும் முடியாது. வெளியிடங்களுக்கு போய் ஆட்களைப் பார்க்கிறப்ப சீற ஆரம்பிச்சிடும். அதனால் காளைகளை வளர்க்கிறவங்க நிலைமை இப்ப ரொம்பவே கஷ்டமா இருக்கு.
நிறைய வீடுகள்ல ஒரு பெருமைக்கு வளர்த்து வந்தாலும் சிலர் வேற வழியே இல்லாம விற்கிற முடிவுக்கும் வந்திட்டாங்க.\ஜல்லிக்கட்டுக்கு நடத்த பெரும் போராட்டம் நடந்த தமிழ்நாட்டுல ஜல்லிக்கட்டுக் காளைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைஞ்சிட்டு வர்றதைத் தடுத்து நிறுத்த அரசு உடனே முன் வரணும்” என்கிறார் புதுக்கோட்டையைச் சேர்ந்த யோகேஷ்.
அலங்காநல்லூர் சரவணமுத்துவிடம் பேசினோம். ”போன வருஷம் இங்க ஜல்லிக்கட்டு மைதானம் திறந்து வச்சாங்க. அதுவே முதல்ல சாதாரண விளையாட்டு கிரவுண்டா தயாரான இடம்தான். கடைசி நேரத்துல ஜல்லிக்கட்டு மைதானமா மாறிடுச்சு. அலங்காநல்லூர்ல இருந்து நாலு கிலோ மீட்டர் தூரத்துல இருக்கிற இந்த இடத்துல ஜல்லிக்கட்டை நடத்தவே இந்தப் பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவிச்சாங்க. இந்த வருஷம் எங்க ஜல்லிக்கட்டு நடக்கப் போகுதுனு தெரியல.
இப்படி இருக்க ஜல்லிக்கட்டு காளைகளைப் பராமரிக்க தர்றதாச் சொன்ன ஆயிரம் ரூபாயை போன வருஷமே எதிர்பார்த்தோம். உதயநிதி விளையாட்டு அமைச்சராகியிருந்ததால அப்பவே அறிவிப்பாங்கனு நினைச்சோம். ஆனா அப்ப ஏமாற்றம்தான் மிஞ்சியது. இப்ப துணை முதலமைச்சர் ஆகியிருக்கிறதால இந்த வருஷமாச்சும் நல்ல அறிவிப்பு வரும்னு ரொம்பவே நம்பிக்கையோட இருக்காங்க, பார்க்கலாம்” என்கிறார் இவர்.
அலங்கா நல்லூர் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து இப்போது நிறையப் பேர் பொருளாதாரத்தைக் காரணம் காட்டி ஜல்லிக்கட்டு காளைகளைப் பராமரிக்க முடியாமல் மணப்பாறை, ஒட்டன்சத்திரம் சந்தைகளுக்குக் கொண்டு போய் விற்கத் தொடங்கியிருக்கிறார்களாம்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் பொங்கல் பண்டிகையின் போதே எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை இரண்டு பேரும் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டு தமிழக அரசு இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமெனக் கேட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.
எனவே, வரும் பொங்கல் பண்டிகையின் போதாவது நல்ல சேதி வருமென எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கிற இவர்களுடைய கோரிக்கைக்குச் செவி சாய்க்குமா தமிழக அரசு?
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY