வாஷிங்டன்: “அமெரிக்காவின் வாக்குறுதிக்காக ஜனநாயகக் கட்சிக்கு வாக்களியுங்கள்” என அக்கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை அவர் எக்ஸ் சமூகவலைதளத்தில் ‘நாளை’ (Tomorrow) என்ற தலைப்பில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவரது குரல் பின்னணியில் ஒலிக்கிறது. “அமெரிக்காவின் வாக்குறுதியின் மீது நமக்கு நம்பிக்கை இருக்கிறது அல்லவா?. அதற்காக போராடத் தயாராக இருக்கிறோம் அல்லவா?. அப்படியென்றால் பின்னோக்கிப் பார்க்காமல் முன்னேறுவோம்.” என்று கமலா கூறுகிறார். இறுதியில் நவம்பர் 5-ம் தேதி வாக்களியுங்கள் என்ற வாசகத்தோடு அந்த வீடியோ நிறைவு பெறுகிறது. தேர்தலை ஒட்டி அவர் பதிவிட்ட அண்மைய பதிவு இதுவாகவே இருக்கின்றது.
உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. அந்த நாட்டின் நேரப்படி நவம்பர் 5-ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த வீடியோவை கமலா ஹாரிஸ் பகிர்ந்துள்ளார்.
அதற்கு முன்னதாக பென்சில்வேனியா மாகாணத்தில் வாக்காளர்களை அவர் சந்தித்த காட்சிகள் அடங்கிய வீடியோவைப் பகிர்ந்திருந்தார். அதன் கீழ் “இன்னும் கூட வாக்காளர்கள் நம் பக்கம் திரும்ப நேரம் இருக்கிறது.” என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவின் 50 மாகாணங்களில் அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, நார்த் கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகியவை அணி மாறும் மாகாணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த 7 மாகாணங்களின் மக்கள், ஒருமுறை குடியரசு கட்சிக்கும், மறுமுறை ஜனநாயக கட்சிக்கும் மாறி மாறி வாக்களிக்கின்றனர். இந்த மாகாணங்களில் அட்லாஸ் இன்டல் என்ற நிறுவனம் கருத்துக் கணிப்பை நடத்தியது. இதில் ட்ரம்ப்புக்கு ஆதரவு அதிகமாக உள்ளது. இந்நிலையில் தான் பென்சில்வேனியா மாகாணத்தில் வாக்காளர்களை சந்தித்த வீடியோவை கமலா பகிர்ந்து, தனக்கான ஆதரவை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்ற தொனியில் கருத்து பதிவிட்டுள்ளார்.
‘கமலாவின் வாக்குறுதிகள்’ – பொருளாதார வளர்ச்சி, வரி சீர்திருத்தம், கருக்கலைப்புக்கு ஆதரவு, எல்லை பாதுகாப்புக்கு முன்னுரிமை, உக்ரைனுக்கு ஆதரவு, இஸ்ரேல்- காசா பிரச்சினைக்கு தீர்வு காண இரு நாடுகள் கொள்கை, முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஏழைகளுக்கான மருத்துவ காப்பீடு விரிவாக்கம், குற்றங்களை கட்டுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து கமலா பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார். துப்பாக்கி வன்முறையை ஒழிப்பது. அதற்கான சட்டங்களை கெடுபிடியாக்குவது குறித்தும் அவர் பேசியுள்ளார்.
வாக்குப்பதிவு எப்போது? அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையே 10.30 மணி நேரம் வித்தியாசம் உள்ளது. இதன்படி அமெரிக்காவில் நவம்பர் 5-ம் தேதி காலை 7 மணி என்றால் இந்தியாவில் மாலை 5.30 மணி ஆகும். அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இரவு 7 மணிக்கு நிறைவடையும்போது இந்தியாவில் புதன்கிழமை அதிகாலை 5.30 மணியாக இருக்கும்.
இந்தத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்ப், ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் களம் காண்கின்றனர். கடைசியாக நடத்தபட்ட கருத்துக் கணிப்பில் கமலாவுக்கு 47% பேரும் ட்ரம்புக்கு 44% பேரும் ஆதரவு அளித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்த உடன் அனைத்து மாகாணங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். பெரும்பாலும் அன்றிரவே புதிய அதிபர் யார் என்பது உறுதி செய்யப்படும். இழுபறி நீடித்தால் ஓரிரு நாட்களுக்குப் பிறகே முடிவு தெரியவரும். எனினும் ஜனவரி 6ஆம் தேதியே அமெரிக்க அதிபர் யார் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். ஜனவரி 20 ஆம் அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா நடைபெறும்.