புதுடெல்லி: ஆன்லைன் கலைக்களஞ்சியம் என கூறிக்கொள்ளும் விக்கிபீடியாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள மத்திய அரசு, வெளியீட்டாளராக ஏன் கருதக்கூடாது என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், விக்கிப்பீடியாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள நோட்டீஸில், “விக்கிப்பீடியா வெளியிடும் தகவல்கள் தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன. தகவல்கள் ஒரு சார்பாகவும், தவறானதாகவும் இருப்பதாக பல்வேறு புகார்கள் அரசுக்கு வந்துள்ளன.
விக்கிப்பீடியாவின் பக்கங்களை உருவாக்குவதிலும், திருத்தம் செய்வதிலும் ஒரு சிறிய குழு ஈடுபட்டு வருவதாக ஒரு பார்வை இருக்கிறது. விக்கிப்பீடியாவை இடைத்தரகராக கருதாமல், ஒரு வெளியீட்டாளராக ஏன் கருதக்கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்கிபீடியா தன்னை ஒரு இலவச ஆன்லைன் கலைக்களஞ்சியம் என விளம்பரப்படுத்துகிறது. அதில் உள்ள பக்கங்களை தன்னார்வலர்கள் உருவாக்கலாம் அல்லது திருத்தலாம் என கூறப்படுகிறது. இந்த பக்கங்களில் பல்வேறு ஆளுமைகள், சர்வதேச, தேசிய, மாநில அளவிலான முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை குறித்து தகவல்கள் அளிக்கப்படுகின்றன. எனினும், இதன் உண்மைத்தன்மை குறித்து நீண்ட காலமாக கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
சமீபத்தில், ஏஎன்ஐ செய்தி நிறுவனம் குறித்த விக்கிப்பீடியா பக்கத்தில், “அதிகாரப் பதவியில் இருப்பவர்களுக்கான பிரச்சாரக் கருவி. இணையதளங்களில் இருந்து போலி செய்திகளை எடுத்து விநியோகிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டிருந்த விவகாரம் விக்கிப்பீடியாவுக்கு சட்ட சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.
விக்கிப்பீடியாவுக்கு எதிராக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் அவதூறு வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ஏஎன்ஐ செய்தி நிறுவனம் குறித்த பக்கத்தில் திருத்தங்களைச் செய்தவர்கள் பற்றிய தகவல்களை வெளியிடத் தவறியதற்கு கடும் ஆட்சேபனையை தெரிவித்தது. மேலும், விக்கிப்பீடியாவிற்கு செப்டம்பர் 5 அன்று அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியது. நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க விக்கிபீடியா விரும்பவில்லை என்றால் அது இந்தியாவில் வேலை செய்ய வேண்டாம் என்றும், அதைத் தடுக்குமாறும் மத்திய அரசைக் கேட்கும் என்றும் கூறியது
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலோன் மஸ்க் கடந்த மாதம் வெளியிட்ட பதிவில், “விக்கிப்பீடியாவிற்கு நன்கொடை அளிப்பதை மக்கள் நிறுத்த வேண்டும். அது ‘தீவிர இடதுசாரி ஆர்வலர்களால்’ கட்டுப்படுத்தப்படுகிறது” என்று குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.