மதுரை: பாபநாசம் முதல் அகஸ்தியர் அருவி வரையிலான சாலைகளை விரைவில் சீரமைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் பாபநாசம் முதல் அகஸ்தியர் அருவி வரை சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க உத்தரவிடக் கோரி சுந்தரவேல் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி கே ஆர் ஸ்ரீராம், நீதிபதி முகமது சபிக் அமர்வில் இன்று (நவ.5) விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், தற்காலிகமாக சாலைகள் பராமரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அது தொடர்பான புகைப்படம் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் தலைமை நீதிபதி, “சாலைகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 1-ம் தேதி வரை மேடுகளும் பள்ளங்களும் நிரப்பப்பட்டதாக வனத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், மனுதாரர் செப்டம்பர் 11-ம் தேதி எடுத்த புகைப்படங்களை தாக்கல் செய்துள்ளார். அவை சாலைகளின் மோசமான நிலையை படம் பிடித்துக் காட்டியுள்ளன.
சாலைகளை தற்காலிக பராமரிப்பு செய்தது பொதுமக்களின் பணத்தை வீணடித்ததை உறுதி செய்கிறது. சாலைகள் பராமரிக்கப்பட வேண்டும் எனக்கூறும் நிர்வாகம், இப்பகுதியில் சாலை சீரமைப்புப் பணிகள் விரைவு படுத்தப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும். சாலைகளை முறையாக சீரமைத்து அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை டிச.10-க்கு ஒத்திவைக்கப்படுகிறது.” என உத்தரவிட்டார்.