மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோவின் பேத்தியும் அந்தக் கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோவின் மகளுமான வானதி ரேணுவுக்கும் சென்னையைச் சேர்ந்த கோகுல கிருஷ்ணன் என்பவருடன் வருகிற நவம்பர் 7ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. திருமணத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பிரபலங்களுக்கு அழைப்பிதழ் தரப்பட்டுள்ளது.
துரை வைகோ – கீதா தம்பதியின் மகள் வானதி ரேணு வெளிநாட்டில் படித்தவர். இவருக்கும் சென்னையைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணனுக்கும் சென்னை திருவேற்காட்டில் வைத்து திருமணம் நவம்பர் 7ம் தேதி நடக்கிறது. திருமண வரவேற்பு முதல் நாள் அதாவது நவம்பர் 6ம் தேதி மாலை நடக்கிறது.
முன்னதாக சமீபத்தில் கட்சி நிர்வாகிகளிடம் பேசிய வைகோ, ‘என் பேத்தியின் திருமணத்துக்கு எல்லோரும் வந்திடணும். ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக பத்திரிக்கை தர முடியாது. அதனால் பொதுச்செயலாளர் நம்மை மறந்துட்டார்னு நினைச்சுடாதீங்க. என் கிராமத்திலேயே எல்லோருக்கும் பத்திரிக்கை தரலை. சொல்லப் போனா துரை கல்யாணத்துக்கு எல்லாம் பத்திரிக்கையே அடிக்கலை. ஆனாலும் ‘நம்ம வீட்டுக் கல்யாணம் னு உரிமையோட எல்லாரும் வந்திடுவாங்க. அதைப் போலத்தான் இதுவும் உங்க வீட்டுக் கல்யாணம் தான். அதனால எல்லாரும் வந்து என் பேத்தியை வாழ்த்திட்டு போகணும்’ என அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் நெருங்கிய உறவினர்களுக்கு வைகோ குடும்பத்திலிருந்து தரப்பட்டிருக்கும் இந்தத் திருமணத்துக்கான அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வெளியாகி ஒருபுறம் சீரியஸான கமென்ட்களைப் பெற்று வருவதுடன் இன்னொருபுறம் விமர்சிக்கவும் பட்டது.
காரணம் ‘ஶ்ரீ ஶ்ரீரங்கநாதப் பெருமாள் திருவருளை முன்னிட்டு’ எனத் தொடங்கும் அந்தப் பத்திரிகையில் வைகோவின் குலம், கோத்ரம், மணமகன் வீட்டாரின் குலம் கோத்ரம் ஆகியவையெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளதுதான்.