புதுடெல்லி: நீதித்துறைக்கான சுதந்திரம் என்பது எப்போதும் அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்குவது என்பதில்லை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
ஊடக நிகழ்வு ஒன்றில் திங்கள் கிழமை பேசிய நீதிபதி சந்திரசூட் கூறுகையில், “தங்களுக்கு சாதகமான தீர்ப்பினை பெறவதற்கு, மின்னணு ஊடகங்கள் மூலமாக அழுத்தம் கொடுக்க சில கும்பல் முயற்சி செய்கிறன. பாரம்பரியமாக, நீதித்துறையின் சுதந்திரம் என்பது நிர்வாகத்தில் இருந்து சுதந்திரமாக இருப்பது என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இப்போது நீதித்துறையின் சுதந்திரம் என்பது அரசாங்கத்திடமிருந்து சுதந்திரமாக இருப்பதைக் குறிக்கிறது. ஆனால் நீதித்துறையின் சுதந்திரம் என்பதன் அடிப்படை அதுமட்டும் இல்லை.
நமது சமூகம் மாறிவிட்டது. சமூக ஊடகங்களின் வருகையுடன் சாதகமான தீர்ப்புகளைப் பெற நீதிமன்றங்களுக்கு அழுத்தம் கொடுக்க சில குழுக்கள் மின்னணு ஊடகங்களைப் பயன்படுத்துகின்றன.
சாதகமான தீர்ப்பளிக்கவில்லையென்றால் நீதிபதிகள் சுதந்திரமாக இல்லை என்று கூறுவதை நான் ஆட்சேபிக்கிறேன். சுதந்திரமாக செயல்படுவதற்கு ஒரு நீதிபதி அவரின் மனசாட்சி என்ன சொல்கிறது என்பதை தீர்மானிக்கும் உரிமை இருக்க வேண்டும். கண்டிப்பாக இங்கே நீதிபதியின் மனசாட்சி சட்டம் மற்றும் அரசிலயலமைப்புகளாலேயே வழிநடத்தப்படுகிறது.
தேர்தல் பத்திரங்கள் குறித்து முடிவெடுத்த போது நீங்கள் சுதந்திரமாக இருக்கிறீர்கள் என்றனர். ஆனால், அரசுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த போது நீதிபதிகள் சுதந்திரமாக இல்லை என்று கூறப்பட்டது. சுதந்திரம் என்பதற்கான எனது வரையறை இது இல்லை. வழக்குகளைத் தீர்ப்பதற்கு நீதிபதிகளுக்கு சுதந்திரம் இருக்க வேண்டும்” என்று சந்திர சூட் தெரிவித்தார். நவம்பர் 10-ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருந்து சந்திரசூட் ஓய்வு பெறுகிறார்.
பிரதமர் என் வீட்டுக்கு வந்ததில் தவறில்லை: விநாயகர் பூஜைக்காக பிரதமர் நரேந்திர மோடி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டுக்கு சென்ற சர்ச்சை குறித்து பேசிய தலைமை நீதிபதி, “அதில் எந்த தவறும் இல்லை. இதுபோன்ற விஷயங்களில் அரசியல் துறையில் முதிர்ச்சி தேவை என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.
நீதித்துறையும் நிர்வாகத்துறையும் எதிரிகள் இல்லை. இதற்கு அர்த்தம் என்னவென்றால் அவர்கள் சந்தித்துக் கொள்ளவே மாட்டார்கள், பேசிக்கொள்ள மாட்டார்கள் என்பதில்லை. மாநிலங்களில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உயர் நீதிமன்ற நிர்வாக குழு, முதல்வரை சந்திக்கும் நெறிமுறையும், முதல்வர் தலைமை நீதிபதியை அவரின் இல்லத்தில் சந்திக்கும் நெறிமுறையும் உள்ளது. பெரும்பாலான இந்த சந்திப்புகளில் பட்ஜெட், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்டவைகளை பற்றி விவாதிப்பார்கள்” என்று கூறிப்பிட்டார்.
விநாயகர் பூஜையின் போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இல்லத்துக்கு பிரதமர் மோடி சென்றது குறித்து காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளும், வழக்கறிஞர்களில் ஒரு பிரிவினரும் நீதித்துறைக்கும் நிர்வாகத்துறைக்கும் இடையிலான உரிமை மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்து கவலை தெரிவித்திருந்தன. மறுபுறம் பாஜக, இது தேவையற்ற விவாதம் என்று தெரிவித்திருந்ததுடன் இது நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதி என்றும் தெரிவித்திருந்தது.