எல்லோரும் எதிர்பார்த்த நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பைக்குகளைக் காட்சிப்படுத்தி, அதிகாரப்பூர்வமாக சில தகவல்களைச் சொல்லியுள்ளது ராயல் என்ஃபீல்டு. C6 மற்றும் S6 என அந்த இரு எலெக்ட்ரிக் பைக்குகளின் ஷார்ட்லிஸ்ட் இதோ!
இதில் S6 பைக்கின் அறிமுகத்தை அடுத்த 2025-ம் ஆண்டு அக்டோபரில்தான் எதிர்பார்க்க முடியும். S6 பைக் ஸ்க்ராம்ப்ளர் எலெக்ட்ரிக்காக உருவாகியுள்ளது. அதற்கேற்ப இதன் சஸ்பென்ஷன் டிராவல் ஹிமாலயனைப் போன்று அநேகமாக 200 மிமீக்கு இணையாக இருக்கலாம். பின்பக்கம் ரியல் வீலுக்கு மேலே டயர் ஹக்கர்… மட்கார்டு கொஞ்சம் உயரமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஸ்போக் வீல்கள், டூயல் பர்ப்பஸ் டயர்கள், தட்டையான பெஞ்ச் ஸ்டைல் சீட் என இருக்கிறது இந்த பைக். இது எலெக்ட்ரிக் பைக்தான்; ஆனால் போலியான இன்ஜின் செட்அப் மாதிரி காட்சிப்படுத்தி இருந்தார்கள். இதன் உள்ளேதான் எலெக்ட்ரிக் மோட்டார் இருக்கும்.
ஓகே! இப்போது C6 பைக்கின் தகவல்களைப் பார்த்துவிடலாம். இதுவும் வெளியாவதற்கு அநேகமாக அடுத்த ஆண்டு அல்லது அதற்கு மேல் ஆகலாம். இதை ஒரு பாபர் ஸ்டைல் எலெக்ட்ரிக் பைக்காக வடிவமைத்திருக்கிறார்கள். Low Slung ஸ்டைலில் இதன் டிசைன் இருக்கிறது. முதலில் இதில் எல்லோரையும் கவரக்கூடிய விஷயம் – அந்த Girder Style முன்பக்க ஃபோர்க்குகள்தான். இந்த ஸ்டைல் சஸ்பென்ஷன் வேறெந்த பைக்குகளிலும் இல்லை. கிர்டர் சஸ்பென்ஷன் செட்அப் கொண்ட முதல் பைக்காக வரப்போகிறது C6.
இந்த C6 பைக்கின் ஃப்ரேம், முழுக்க அலுமினியத்தால் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. ஒரு பட்ஜெட் எலெக்ட்ரிக் வாகனங்களில் இதுவும் மிகவும் அரிதான விஷயம்! இன்னொரு ப்ரீமியமான விஷயம் – இதன் TFT டேஷ்போர்டு. புதிய ஸ்விட்ச் கியர்கள் இதில் வழங்கப்படும். ஸ்விட்ச்கள் மட்டுமல்ல; இதன் எல்இடி ஹெட்லைட்டும் வேறெந்த ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் இல்லாதவையாக இருக்கிறது.
முன், பின் என இரண்டு பக்கங்களிலும் டிஸ்க் பிரேக் இருக்கிறது. இதன் டயர்கள் மிகவும் ஒல்லியாக இருக்கின்றன. எலெக்ட்ரிக்குக்கு இது போதும்னு நினைத்துவிட்டதோ ராயல் என்ஃபீல்டு! ஆனால், இதில் குறைந்த Rolling Resistance இருப்பதாகச் சொல்கிறது அந்நிறுவனம். அதனால், சிட்டிக்குள் இதை ஓட்ட சூப்பராக இருக்கலாம்.
பாபர் ஸ்டைலில் சோலோ சீட்டரைக் காட்சிப்படுத்தி இருந்தாலும், இதில் பில்லியன் சீட்டும் ஆப்ஷனலாக வழங்கப்படும்.
ஹோண்டாவின் காஸ்ட்லி பைக்குளை Big Wing ஷோரூமில்தான் வாங்க முடியும். அதேபோல் மாருதியின் ப்ரீமியம் கார்களை Nexa ஷோரூமில்தான் வாங்க முடியும். அதேமாதிரி, இந்த எலெக்ட்ரிக் பைக்குகளை ராயல் என்ஃபீல்டு ஷோரூமிலேயே வாங்கிக் கொள்ளலாமா? அல்லது Flying Flea எனும் பெயரில் ஷோரூம் திறக்கப்படுமா என்பது இன்னும் தெரியவில்லை. ஓகே! அதென்ன ஃப்ளையிங் ஃப்ளியா?
ஒரு சின்ன ஃப்ளோஷ்பேக். இந்தப் பெயரில் அந்தக் காலத்தில் ஒரு 125 சிசி பைக் வெற்றிகரமாக விற்பனையாகி வந்தது. இரண்டாம் உலகப்போர் நடந்த சமயங்களில் இந்த பைக்கின் பங்கு ராணுவ வீரர்களுக்குப் பெரிதும் உதவியது. இதற்குப் பெருமை சேர்க்கும் விதமாகத்தான் இந்த Flying Flea எனும் பெயரைத் தன் எலெக்ட்ரிக் பிராண்டுக்குச் சூட்டியிருக்கிறது ராயல் என்ஃபீல்டு நிறுவனம். லைட்வெயிட்டான பைக்காக இருக்கப் போகிறது; அந்தளவு ராணுவத்துடன் தொடர்பு கொண்டது என்பதற்காகத்தான் இதன் அறிமுக டீஸரில், ஒரு பாராசூட்டில் இந்த பைக் தரையிறங்குவதுபோல் காட்டியிருந்தார்கள்.
அதனால், இந்த C6 ஸ்டைல் என்னப்பா இப்படி இருக்கே என்று யாரும் கிண்டல் செய்துவிட முடியாது. காரணம், Flying Flea-வின் பல அம்சங்கள் இந்த C6 பைக்கில் இருப்பதுபோல் இதன் டிசைனை வடிவமைத்துள்ளார்கள்.