பிரதமர் மோடிக்காக நிறுத்தப்பட்ட ஹேமந்த் சோரனின் ஹெலிகாப்டர்; ஜனாதிபதியிடம் ஜே.எம்.எம். புகார்

ராஞ்சி,

பிரதமர் நரேந்திர மோடியின் ஜார்க்கண்ட் வருகையின்போது பாதுகாப்பு காரணம் காட்டி, முதல்-மந்திரி ஹேமந்த் சோரனின் ஹெலிகாப்டரை எடுக்க அனுமதி அளிக்காமல் தாமதம் செய்தது குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு ஜே.எம்.எம். செய்தித் தொடர்பாளர் சுப்ரியோ பட்டாச்சார்யா கடிதம் எழுதியுள்ளார்.

அனைத்துக் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்களும் சமமாக நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று ஜனதிபதியிடம் கடிதம் வாயிலாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அந்த கடிதத்தில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நட்சத்திர பேச்சாளரும், மாநிலத்தின் முதல்-மந்திரியுமான ஹேமந்த் சோரன் நேற்று மதியம் 1.45 மணிக்கு மேற்கு சிங்பூமில் உள்ள குத்ரியில் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற பிறகு, சிம்டேகாவில் உள்ள பஜார் தாண்டில் மதியம் 2.25 மணிக்கு தேர்தல் கூட்டத்தில் உரையாற்ற திட்டமிட்டிருந்தார்.

அதே நாளில் பாஜகவின் நட்சத்திரப் பேச்சாளரும், பிரதமருமான நரேந்திர மோடி, சாய்பாசா கல்லூரி மைதானத்தில் பிற்பகல் 2:40 மணிக்கு பிரசாரம் செய்தார். பிரதமர் பிரசாரம் செய்த சாய்பாசாவிலிருந்து ஹேமந்த் சோரன் பிரசாரம் செய்த குத்ரிக்கு 80 கி.மீ. தொலைவு, குத்ரியில் இருந்து சிம்டேகாவுக்கு 90 கி.மீ. தொலைவு உள்ளது. ஆனால், பிரதமரின் பாதுகாப்பு நெறிமுறையை மேற்கோள் காட்டி, ஒன்றரை மணிநேரம் ஹேமந்த சோரனின் ஹெலிகாப்டருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் முதல்-மந்திரி பழங்குடியின சமூகத்திலிருந்து வந்தவர், பெரும் போராட்டத்திற்குப் பிறகு இந்த நிலையை அடைந்தார். நீங்களும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு நாட்டின் மிக உயர்ந்த பதவியை அடைந்தீர்கள் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும் பாரபட்சமின்றி சமமான தேர்தல் களத்தை அனைத்துக் கட்சிகளுக்கும் உருவாக்குவதை ஜனதிபதி தலையிட்டு உறுதி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.