MP: “என் பாதுகாப்பு கருதியே அதைச் செய்தேன்" – கணவன் ரத்தத்தை சுத்தம் செய்த கர்ப்பிணி வாக்குமூலம்!

மத்தியப் பிரதேச மாநிலம், திண்டோரி மாவட்டம், பழங்குடி மக்கள் அதிகம் வாழும் கிராமம் லால்பூர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சிவராஜ் மாராவி(40). இவர் தன் ஐந்து மாத கர்பிணியான மனைவி ரோஷ்னி, மூன்று மற்றும் ஐந்து வயதில் இரண்டு மகள் என குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில், தீபாவளியன்று மாலை, சிவராஜ், அவரது சகோதரர் ரகுராஜ் (35), மற்றும் அவர்களின் தந்தை தரம் சிங் (65) ஆகியோரை 20-25 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கியிருக்கிறது. இதில், தரம் சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த சிவராஜ் மாராவியை அவருடைய மனைவி ரோஷ்னி கடசரைப் பகுதி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

கணவனை இழந்து நிற்கதியாக நின்ற அந்த ஐந்து மாத கர்ப்பிணியிடம் சிவராஜ் மாராவி படுத்திருந்த படுக்கையில் இருந்த ரத்தத்தை சுத்தம் செய்துவிட்டு செல்லுமாறு மருத்துவமனை நிர்வாகம் கூறியிருக்கிறது. ரோஷ்னி சுத்தம் செய்யும் வீடியோ வெளியாகி வைரலானது.

ஆனால் மருத்துவமனை நிர்வாகம், “அந்தப் பெண்ணிடம் யாரும் சுத்தம்செய்யக் கூறவில்லை. இறந்தவரின் மனைவி படுக்கையில் இருந்து ரத்தத்தை ஒரு துணியால் துடைக்க அனுமதிக்குமாறு எங்களிடம் கேட்டார், அவர் அதை ஆதாரமாகப் பயன்படுத்தலாம் எனக் கருதி அனுமதித்தோம். நாங்களாகவே அவரை படுக்கையை சுத்தம் செய்யும்படி கேட்கவில்லை.” என விளக்கமளித்தது.

இந்த நிலையில், தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய ரோஷ்னி, “2019-ம் ஆண்டு நானும் என் கணவரும் காதல் திருமணம் செய்துகொண்டோம். என் வீட்டார் அவரிடம் பணம் இல்லை, நிம்மதியாக வாழ முடியாது என எதிர்த்தார்கள். பணம் முக்கியமில்லை என்றே அவருடன் திருமணம் செய்துகொண்டேன். நான் ஒரு செங்கல் சூளையில் வேலை செய்துவருகிறேன். என் கணவர் ஆட்டோ டிரைவர். என் மாமனாருக்கு விவசாய நிலம் இருக்கிறது. அதில் ஒரு பகுதியில் நாங்கள் விவசாயம் செய்துவந்தோம். அந்த நிலம் ரகுராஜுக்கும் சொந்தம் என கடந்த சில வருடங்களாக பிரச்னை சென்றுக்கொண்டிருந்தது.

மத்தியப்பிரதேச அவலம்

இந்த நிலையில்தான் ரகுராஜ் ஆள்களுடன் வந்து என் கணவரை அடித்து கொலை செய்தார். அந்த கும்பல் என் கணவரை தாக்கத் தொடங்கும்போது நான் அவசர அவசரமாக காவல்நிலையத்துக்கு செல்போனில் அழைத்தேன். ஆனால் யாரும் அந்த அழைப்பை எடுக்கவில்லை. அதன்பிறகுதான், அவரை மருத்துவமனையில் அனுமதித்தேன். ஆனாலும் அவர் இறந்துவிட்டார். தீபாவளிக்கு என் குழந்தைகள் அணிய வேண்டும் என்பதற்காக வாங்கிய புதுத்துணி இன்னும் அப்படியேதான் இருக்கிறது. என் குழந்தைகள் தந்தை எங்கே எனக் கேட்டு அழுகிறார்கள்.

என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை. மருத்துவமனையில் என் கணவரின் உடலை எடுத்துச் செல்லக் கூறியவுடன் இரண்டுபேர் வந்து, என் கணவர் படுத்து சிகிச்சைப் பெற்ற படுக்கையில் இருந்த ரத்தத்தை சுத்தம் செய்துவிட்டுச் செல்லும்படி கேட்டார்கள். இப்போது எங்கள் வீட்டில் எந்த ஆண்களும் இல்லை. அதனால், எங்கள் பாதுகாப்புக்காக நான் அந்த ரத்தத்தை சுத்தம் செய்தேன். வீட்டுக்கு வந்தப் பிறகுதான் அந்த வீடியோ வைரலானது எனக்கு தெரியும்.” எனத் தெரிவித்திருக்கிறார்.

மத்தியப்பிரதேச அவலம்

அதைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம், தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி சந்திரசேகர் சிங்கை இடமாற்றம் செய்தும், ராஜ்குமாரி மார்க்கம், சோட்டி பாய் தாக்கூர் ஆகிய இரு செவிலியர்களை இடைநீக்கம் செய்தும் உத்தரவிட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.