குன்றத்தூரில் பிரபல கடையில் பல்லி விழுந்த பிரியாணி சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி, மயக்கம்: 14 நாட்கள் கடையை மூட உத்தரவு

காஞ்சிபுரம்: குன்றத்தூரில் ஆற்காடு பிரியாணி சிக்கன், மட்டன் ஸ்டாலில் பல்லி விழுந்த பிரியாணி சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்தக் கடையில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கடையில் சுகாதார சீர்கேடுகள் இருந்ததால் 14 நாட்கள் மூடும்படி உத்தரவிட்டுள்ளனர்.

குன்றத்தூரைச் சேர்ந்தவர் ராஜேஷ்(25). இவர் தண்ணீர் லாரி ஓட்டி வருகிறார். குன்றத்தூரில் உள்ள ஆற்காடு பிரியாணி சிக்கன், மட்டன் ஸ்டால் என்ற ஹோட்டலுக்குச் சென்ற ராஜேஷ் பிரியாணி பொட்டலங்களை வாங்கியுள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை: அந்த பிரியாணியை தனது மனைவி ரேபேக்கா(23), தங்கை சுகன்யா, அவரது கணவர் மகேஷ் மற்றும் குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார். அவரும் சாப்பிட்டுள்ளார். அப்போது அந்த பிரியாணியில் பல்லி இறந்த நிலையில் இருந்துள்ளது. உடனே ரெபேக்காவுக்கு வாந்தி மயக்கமும் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து பிரியாணி சாப்பிட்ட அனைவரும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து உணவகத்தின் உரிமையாளர் சையத் அக்பர் பாஷாவிடம் கேட்டபோது, முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே அவர் குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து குன்றத்தூர் உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார் மற்றும் போலீஸார் அந்த பிரியாணி கடையை ஆய்வு செய்தனர்.

அதிகாரி உத்தரவு: இந்த ஆய்வின்போது சமையல் கூடம் மற்றும் சில இடங்கள் சுகாதாரமற்ற முறையில் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த உணவகத்தில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதுவரை 14 நாட்களுக்கு கடையை நடத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டனர். பணிகள் முடிந்து மீண்டும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்திய பிறகே கடையை திறக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.