அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக ஒரு பெண் அதிபராகப்போகிறார் என்று பலரும் கூறிவந்த நிலையில், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் அதிபராக உள்ளார்.
முன்னதாக, பைடனின் வயது முதிர்வு காரணமாகக் கடைசி நேரத்தில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கமலா ஹாரிஸ், குறுகிய காலத்தில் முடிந்த அளவு ட்ரம்ப்பை எதிர்த்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு மக்களின் ஆதரவைப் பெற்றார்.
மறுபக்கம், ட்ரம்ப்பும் பொதுவான விமர்சனத்தோடு, கமலா ஹாரிஸ்மீது தனிநபர் தாக்குதல் விமர்சனத்திலும் தீவிரமாக ஈடுபட்டார். கூடவே, உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், ட்ரம்ப்புக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கி பிரசாரம் மேற்கொண்டார். மறுபக்கம், முன்னாள் அதிபர் ஒபாமா உள்பட பலரும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாகப் பிரசாரத்தில் இறங்கினர்.
இதனால், தேர்தலுக்கு முன்பே கடும்போட்டி நிலவிய சூழலில், நேற்று பரபரப்பாக வாக்குப் பதிவு தொடங்கியது. இந்த நிலையில், அமெரிக்காவில் 50 மாகாணங்களில் மொத்தமுள்ள 538 எலெக்டோரல் ஓட்டுகளில் 270 எலெக்டோரல் ஓட்டுகளைப் பெற்று மீண்டும் அதிபராக இருக்கிறார் ட்ரம்ப்.
இந்த வெற்றிக்குப் பின்னர் உரையாற்றிய ட்ரம்ப், “இதுவரை யாரும் பார்த்திராத இயக்கம் இது. வெளிப்படையாகச் சொன்னால், எல்லா காலத்திலும் இது மிகப்பெரிய அரசியல் இயக்கம் என்று நான் நம்புகிறேன். இப்போது, அது ஒரு புதிய முக்கியத்துவத்தை அடையப் போகிறது. ஏனெனில், நம் நாட்டை சரிப்படுத்த நாங்கள் உதவப் போகிறோம்.
நம் எல்லைகளை நாங்கள் சரிசெய்யப் போகிறோம். நம்பமுடியாத அரசியல் வெற்றியை நாங்கள் பெற்றிருக்கிறோம். அமெரிக்கர்களுக்காக நாம் வரலாறு படைத்திருக்கிறோம். உங்களுக்காக, உங்கள் குடும்பத்துக்காக, உங்களின் எதிர்காலத்துக்காக என்னுடைய ஒவ்வொரு மூச்சிலும் நான் போராடுவேன். நம் நாட்டின் குழந்தைகளுக்கு வலுவான, பாதுகாப்பான, வளமான அமெரிக்காவை வழங்கும் வரை நான் ஓயமாட்டேன். இது உண்மையில் அமெரிக்காவின் பொற்காலமாக இருக்கும்.” என்று கூறினார்.