கான்பெரா: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவால் அதன் கொள்கை ரீதியிலான போக்கில் பெரிய மாற்றம் இருக்கப்போவதில்லை என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெய்சங்கர், “அமெரிக்க கொள்கையின் நீண்டகால போக்கு என்று நான் கூறிவரும் விஷயத்தை அங்கு நடைபெற்றுவரும் தேர்தல் மாற்றியமைக்கும் என்று நான் நம்பவில்லை. அநேகமாக, முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவில் இருந்து தொடங்கி அமெரிக்கா அதன் சர்வதேச கடமைகள் குறித்து மிகவும் எச்சரிக்கையுடன் உள்ளது. உதாரணமாக அமெரிக்கா தனது துருப்புக்களை (ராணுவம்) நிலைநிறுத்துவதில் தயக்கம் காட்டுகிறது.
அதிபர் ஜோ பைடன் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கத் துருப்புகளைத் திரும்பப் பெற்றார். அதிபர் ட்ரம்ப் இந்த விஷயத்தில் இன்னும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் இருக்கலாம். அமெரிக்காவின் முந்தைய ஆதிக்கம் மற்றும் தாராளவாத மனப்பான்மை இனியும் தொடராத ஓர் உலகத்துக்கு நாம் தயாராக வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.” என்று தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களுடனான விவாத நிகழ்வில் ஜெய்சங்கர் இதனைத் தெரிவித்தார். மூன்று நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும், தங்களின் நாடுகள் தாங்கள் விரும்பும் உலகளாவிய சூழலை உருவக்க முன்வர வேண்டும் என்று தெரிவித்தனர்.
ஒருவிதமான ஒருமித்த கூட்டு நடவடிக்கைகளை உருவாக்குவதில் இன்று நாம் ஆர்வமாக உள்ளோம் என்று ஜெய்சங்கர் தெரிவித்தார். நியூசிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் வின்ஸ்டோன் பீட்டர், “பாதுகாப்பு பற்றிய கொள்கை அதிகமாக உள்ளது. ஒரு காலத்தில் நாம் கட்டியெழுப்ப முயற்சித்த உலகம் மாறிக்கொண்ட இருக்கிறது. நாம் அதற்கு எதிர்வினையாற்றி அதனுடன் மாற வேண்டும்” என்று தெரிவித்தார்.