புதுடெல்லி: நாட்டினை ஆளும் அமைப்புகளை புதிய வகையான ஏகபோகவாதிகள் கட்டுப்படுத்தி வருகிறார்கள் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றில் எழுதியுள்ள தலையங்கத்தில் அவர் இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார்.
ராகுல் காந்தி அந்த தலையங்க கட்டுரையில் கூறியிருப்பதாவது: அசல் கிழக்கு இந்தியா நிறுவனம் 150 ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துவிட்டது. ஆனால், அது உருவாக்கிய மூல பயம் மீண்டும் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தை ஒரு புதுவகை சர்வாதிகாரிகள் தற்போது பிடித்துள்ளனர். இந்தியா மிகவும் சமத்துவமின்மை நாடாக மாறியிருந்தாலும், அந்த ஏகபோகவாதிகள் பெரும் செல்வத்தை குவித்துள்ளனர்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஏகபோக மாதிரியை நடத்தி வருகிறது. அது சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களை பேரழிவுக்கு உட்படுத்தியுள்ளது. இது வேலைவாய்ப்பின்மைக்கு வழிவகுத்துள்ளது.
இந்தியாவின் நூற்றுக்கணக்கான புத்திசாலித்தனமான, ஆற்றல்மிக்க வணிகத் தலைவர்கள் இந்த ஏகபோகவாதிகளைக் கண்டு அஞ்சுகிறார்கள். பாரத அன்னை அவளின் எல்லாப் பிள்ளைகளுக்கும் பொதுவானவள். அவளின் வளங்கள் மற்றும் அதிகாரத்தில் நிலவும் ஏகபோக உரிமை, குறிப்பிட்ட சிலரின் நலனுக்காக பலருக்கு அவை வழங்கப்படாமல் தடுக்கும் வகையில் பாரத அன்னையைக் கட்டாயப்படுத்துகிறது.
இந்த ஏகபோகவாதிகளை எதிர்த்துப் போட்டியிடுவது இந்திய அரசு இயந்திரத்தை எதிர்த்துப் போட்டியிடுவதற்கு சமம். அவர்களின் முக்கியமான திறன் உற்பத்தி, நுகர்வோர் அல்லது யோசனை என்பது இல்லை. அவர்களின் திறன் என்பது இந்தியாவின் நிர்வாக அமைப்புகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களை கண்காணிப்பது.
இந்த புதிய இனம் இந்தியர்கள் எதைப் பார்க்க வேண்டும் படிக்கவேண்டும் என்பதை முடிவு செய்கிறார்கள். மேலும் இந்தியர்கள் எவ்வாறு சிந்திக்க வேண்டும் எதைப் பேச வேண்டும் என்பதையும்.
இன்று சந்தை சக்திகள் வெற்றிகளை தீர்மானிப்பதில்லை. அதிகார உறவுகளே தீர்மானிக்கின்றன. என்றாலும் புதுமைகளை கண்டுப்பிடித்து விதிகளின்படி இயங்கும் உள்நாட்டு நிறுவனங்களின் சிறிய மாதிரிகளும் உள்ளன.
வணிக அமைப்பில் பினாமி செயல்பாடுகளை அனுமதிக்க முடியாது. இந்த மிகப்பெரும் ஏகபோகவாதிகள் தீமையானவர்கள் இல்லை மாறாக இந்தியாவின் சமூக மற்றும் அரசியல் சூழலின் போதாமைகளின் வெளிப்பாடுகள். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.