மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. அதற்கும் மேலாக இரண்டு குடும்பங்கள் ஒரு தொகுதிக்காக மோதிக்கொண்டிருக்கின்றன. முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவாரின் சொந்த ஊர் பாராமதியாகும். இத்தொகுதி கடந்த மக்களவைத் தேர்தல் வரை சரத் பவாரின் குடும்ப தொகுதியாகவே இருந்தது. ஆனால் தேசியவாத காங்கிரஸ் கடந்த ஆண்டு இரண்டாக உடைந்த பிறகு நடந்த மக்களவைத் தேர்தலில் அஜித் பவார் தனது மனைவியை பாராமதி தொகுதியில் நிறுத்தினார். சரத் பவார் தனது மகளை இத்தொகுதியில் நிறுத்தினார். இதனால் தேர்தலில் கடுமையான போட்டி நிலவியது. வழக்கமாக பாராமதியில் தேர்தல் முடிவுகள் ஒரு பக்கம் சார்ந்ததாகவே இருக்கும். கடந்த மக்களவைத் தேர்தலில் அஜித் பவாரும், சரத் பவாரும் தீவிர பிரசாரம் செய்தனர். சரத் பவார் வழக்கமாக பாராமதி தொகுதியில் பெரிய அளவில் பிரசாரம் செய்ய மாட்டார்.
தேர்தல் தொடங்கும் போது ஒரு கூட்டத்திலும், கடைசி நேரத்தில் ஒரு கூட்டத்திலும் மட்டுமே உரையாற்றுவார். அஜித் பவார், தனது மகள் என இருவருக்கும் சரத் பவார் ஒரே மாதிரியான நடைமுறையையே சரத்பவார் கடைப்பிடித்து வந்தார். கடந்த மக்களவைத் தேர்தலில்தான் தனது வழக்கமான நடைமுறையை மாற்றிக்கொண்டு சரத் பவார் தனது மகளுக்காக தொடர்ந்து பல்வேறு பொதுக்கூட்டங்களில் உரையாற்றினார். தற்போது அஜித் பவார் சட்டமன்றத் தேர்தலில் பாராமதி தொகுதியில் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் சரத் பவார் தனது தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சி சார்பாக அஜித் பவாரின் சகோதரர் மகன் யுகேந்திர பவாரை வேட்பாளராக நிறுத்தி இருக்கிறார். பவார் குடும்பம் மீண்டும் தேர்தலில் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
இத்தேர்தலில் அஜித் பவாரை தோற்கடிக்கவேண்டும் என்பதில் சரத் பவார் தீவிரமாக இருக்கிறார். இதற்காக சரத் பவார் பாராமதி தொகுதியில் தொடர்ச்சியாக பிரசார கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.
வழக்கமாக பாராமதியில் ஒரு சில பொதுக்கூட்டங்களில் மட்டும் பங்கேற்கும் சரத் பவார் இப்போது அதற்குள் ஐந்து பொதுக்கூட்டங்களில் உரையாற்றிவிட்டார். இது குறித்து பாராமதி மூத்த பத்திரிகையாளர் சிந்தாமணி என்பவரிடம் பேசியபோது, “வழக்கமாக அஜித் பவாருக்காகவோ அல்லது சுப்ரியாவிற்காகவோ சரத் பவார் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள மாட்டார். அதோடு சரத் பவார் தான் சொந்தமாக பாராமதியில் போட்டியிட்ட போதுகூட பெரிய அளவில் பிரசாரம் செய்தது கிடையாது. தேர்தல் பணிகளை கட்சி நிர்வாகிகளிடம் கொடுத்துவிட்டு அவர் மாநிலம் முழுவதும் சென்று பிரசாரம் செய்வார். ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை. அஜித் பவாரை எதிர்த்து அவரது குடும்பத்தில் ஒருவரே போட்டியிடுகிறார். எனவே சரத் பவார் இந்த அளவுக்கு தீவிர பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார்” என்றார்.
சரத் பவார் இன்று முதல் மகாவிகாஷ் அகாடி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார் என்று சரத் பவாருக்கு நெருக்கமான சுபாஷ் தோலே தெரிவித்துள்ளார். தனக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தி சரத் பவார் தவறு செய்வதாக அஜித் பவார் குறிப்பிட்டு இருந்தார். அஜித் பவார் இத்தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டால் தொண்டர்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு அடியோடு சரிந்துவிடும். எனவே அஜித் பவாரும் இதில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இரண்டு பேருக்கும் இத்தேர்தல் ஒரு கெளரவப் பிரச்னையாக மாறி இருக்கிறது. எனவேதான் தனது 83வது வயதிலும் ஓய்வில்லாமல் சரத் பவார் உழைத்துக்கொண்டிருக்கிறார். தற்போது ராஜ்ய சபை உறுப்பினராக இருக்கும் சரத் பவார் இப்பதவி முடிந்த பிறகு மேற்கொண்டு தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று நேற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அரசியல் சண்டையால் இந்த ஆண்டு சரத் பவார் வீட்டில் நடந்த தீபாவளி விருந்தில்கூட அஜித் பவார் பங்கேற்பதை தவிர்த்துவிட்டார். இதனால் பவார் குடும்ப உறவில் விரிசல் மேலும் அதிகரித்துள்ளது.