மதநல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் பதக்கம்: தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை: மத நல்லிணக்கத்துக்காக தமிழக அரசால் வழங்கப்படும் கோட்டை அமீர் நல்லிணக்கப் பதக்கத்துக்கு தகுதியானவர்கள் வரும் நவ.25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு இன்று (புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டு உயிர்நீத்த கோயம்புத்தூரைச் சேர்ந்த கோட்டை அமீர் பெயரால் ‘கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்’ ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டு சிறப்பாக சேவை செய்துவரும் ஒருவருக்கு ஆண்டுதோறும், குடியரசு தின விழாவில் முதல்வரால் இந்தப் பதக்கம் வழங்கப்படுகிறது.

இந்த பதக்கத்துடன், ரூ.25 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் தகுதியுரை ஆகியவை வழங்கப்படும். மத நல்லிணக்கத்துக்காக சேவை செய்துவரும் தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதக்கத்தைப் பெறத் தகுதியுடையவராவர். இப்பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை.

இந்நிலையில், அடுத்தாண்டு ஜன.26-ம் தேதி குடியரசு தின விழாவின்போது வழங்கப்படவுள்ள பதக்கத்துக்குத் தகுதியானவரை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்துடன், அவை தொடர்பான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மூலமாகவோ அல்லது ‘https://awards.tn.gov.in’ என்ற இணைய தளம் மூலமாகவோ அரசுச் செயலாளர், பொதுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு வரும் நவ.25-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். பதக்கம் பெறத் தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜன.26-ம் தேதி குடியரசு தினத்தில் முதல்வரால் பதக்கம் வழங்கி கவுரவிக்கப்படுவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.