India A vs Australia A Test Match Updates: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் (India vs Australia) மோதும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் (Border Gavaskar Trophy Series) வரும் நவ. 22ஆம் தேதி நடைபெறுகிறது. இந்திய வீரர்கள் விரைவில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். அதற்கு முன் தற்போது இந்தியா ஏ அணி (India A) ஆஸ்திரேலியா ஏ அணியுடன் மோதி வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் இந்தியா ஏ – ஆஸ்திரேலியா ஏ மோதுகின்றன.
முதல் போட்டியில் ஆஸ்திரேலியா ஏ அணி (Australia A) 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி நாளை (நவ. 7) முதல் நான்கு நாள்களுக்கு மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே, இந்திய அணியின் (Team India) மெயின் ஸ்குவாடில் இருக்கும் அபிமன்யூ ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் இந்திய ஏ அணியில் விளையாடுகின்றனர்.
ஓப்பனராகும் ‘ஸ்டார்’ வீரர்
அதுமட்டுமின்றி ரிசர்வ் வீரர்களாக இருக்கும் முகேஷ் குமார், நவ்தீப் சைனி, கலீல் அகமது ஆகிய மூவரும் இந்திய ஏ அணியில் உள்ளனர். இதில் கலீல் அகமதை தவிர அனைவரும் முதல் போட்டியின் பிளேயிங் லெவனில் இருந்தனர். இந்த சூழலில், நியூசிலாந்து டெஸ்ட் தொடர் நிறைவடைந்த உடனேயே கேஎல் ராகுல் மற்றும் துருவ் ஜூரேல் ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.
இவர்கள் நாளை ஆஸ்திரேலிய ஏ அணியுடனான போட்டியில் இந்திய ஏ அணி சார்பில் விளையாட உள்ளனர். அதிலும் கேஎல் ராகுல் (KL Rahul) நாளைய போட்டியில் அபிமன்யூ ஈஸ்வரன் (Abhimanyu Easwaran) உடன் ஓப்பனிங்கில் இறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், துருவ் ஜூரேல் (Dhuruv Jurel) விக்கெட் கீப்பிங்கையும் கவனித்துக்கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரோஹித்தின் இடம் அபிமன்யூவுக்கு இல்லை?
இதனால், முதல் போட்டியில் விளையாடிய பாபா இந்திரஜித் மற்றும் இஷான் கிஷன் உள்ளிட்டோருக்கு ஓய்வு வழங்கப்படலாம் என தெரிகிறது. கேஎல் ராகுல் ஓப்பனிங் ஸ்பாட்டில் இறங்குவதால் ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad) 3ஆவது வீரராக களமிறங்குவார் என தெரிகிறது. பந்துவீச்சில் பெரிய மாற்றம் இருக்காது. கலீல் அகமதிற்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்பதும் நாளைதான் தெரியும். ஒருவேளை நாளைய போட்டியில் அபிமன்யூ ஈஸ்வரன் சிறப்பாக விளையாடினால் மட்டுமே முதல் டெஸ்ட் போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.
இந்திய அணிக்கு பெரிய நன்மை
கேஎல் ராகுல் ஏற்கெனவே வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் ஓப்பனிங்கில் இறங்கி உள்ளார். தற்போது ரோஹித் சர்மா (Rohit Sharma) முதல் போட்டியை தவறவிடும்பட்சத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் உடன் கேஎல் ராகுலை ஓப்பனராக களமிறக்க, ஒரு பரிசார்த்த முயற்சியாக அவர் நாளைய போட்டியில் ஓப்பனராக களமிறக்கப்படுகிறார் என கூறப்படுகிறது.
அவர் ஓப்பனிங்கில் இறங்கினால் மிடில் ஆர்டரில் நிதிஷ் குமார் ரெட்டி (Nitish Kumar Reddy) போன்ற வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டருக்கு ஆஸ்திரேலியா தொடரில் களமிறக்கும் வாய்ப்பும் கிடைக்கும். இதனால் இந்திய அணிக்கு நான்காவது வேகப்பந்துவீச்சு ஆப்ஷனும் கிடைக்கலாம். துருவ் ஜூரேல், சர்ஃபராஸ் கான் அல்லது அஸ்வின் ஆகியோருக்கும் கூட பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்க இது வழிவகுக்கலாம்.