புதுடெல்லி: இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி கூண்டோடு கலைக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் பிசிசி (பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி) பிரிவு, மாவட்டத் தலைவர்கள் மற்றும் ப்ளாக் காங்கிரஸ் கமிட்டிகளின் மாநிலப் பிரிவு முழுவதையும் உடனடியாக கலைப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இமாச்சலில் காங்கிரஸ் கட்சியை மறுசீரமைக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இமாச்சல் முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மனைவி பிரதீபா சிங் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அதன் பிறகு அங்கு கட்சிக்குள் பல்வேறு பிரிவுகள் உருவாகி தொடர்ந்து கோஷ்டி மோதல்கள் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக கடந்த மாநிலங்களவை தேர்தலில் கட்சி உறுப்பினர்கள் சிலர் காங்கிரஸ் வேட்பாளர் அபிஷேக் மனு சிங்விக்கு எதிராக வாக்களித்ததால் பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மகாஜன் வெற்றிபெற்றார். இதன் காரணமாகவே இமாச்சலில் கட்சியை கூண்டோடு கலைக்க தலைமை முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
முன்னதாக ஒடிசா மாநிலத்தில் தேர்தல் தோல்வியை தொடர்ந்து கட்சியை கூண்டோடு கலைத்து காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டது. புதிய நிர்வாகத்தை தேர்வு செய்யும் வரை 15 பேர் கொண்ட தற்காலிக் கமிட்டி நியமிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.