உத்தரபிரதேச அரசு அமல்படுத்திய மதரஸா கல்விச் சட்டம் செல்லும்: உறுதி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநில அரசு கொண்டு வந்து அமல்படுத்திய மதரஸா கல்விச் சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2004-ம் ஆண்டில், உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி தலைமையிலான அரசு, மதரஸா கல்விச் சட்டத்தை கொண்டு வந்தது. இதை எதிர்த்து அன்ஷுமன் சிங் ரத்தோர் என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: உத்தரபிரதேச மாநில அரசு கொண்டு வந்துள்ள மதரஸா கல்விச் சட்டம் – 2004 என்பது அரசியல் சாசனத்துக்கே எதிரானது. இந்தச் சட்டம் செல்லுபடியாகாது. இதை ரத்து செய்யவேண்டும். இவ்வாறு அன்ஷுமன் தனது மனுவில் கூறியிருந்தார்.

வழக்கு விசாரணை முடிந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தின் மதரஸாக்களில் பயிலும் மாணவர்களை மாநில அரசு, வேறு அரசு பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கடந்த ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில் இவ்வழக்கில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பளித்தது.

அதில் நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு கூறும்போது, “உத்தரபிரதேச அரசு அமல்படுத்திய மதரஸா சட்டம் செல்லும். இதைத் தொடர்ந்து அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நாங்கள் ரத்து செய்கிறோம்.

சிறுபான்மையினர் கல்வி நிலையங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு. மாநில அரசு கொண்டு வந்த உத்தரபிரதேச மதரஸா கல்விச் சட்டமானது, மதச்சார்பின்மைக் கொள்கையை மீறவில்லை.

எனவே, உத்தரபிரதேச மதரஸா சட்டத்தின் செல்லுபடியை நாங்கள் உறுதி செய்துள்ளோம். மதச்சார்பின்மையின் அடிப்படைக் கட்டமைப்பை மீறியதற்காக மதரஸா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கூறியது தவறு ” என்று தெரிவித்தனர்.

வழக்கில் நீதிபதி ஜே.பி.பர்திவாலா கூறும்போது, “மதத்தை போதிப்பது அரசியலமைப்புச் சாசனத்தால் தடை செய்யப்படவில்லை. இது போன்ற மத அறிவுரைகள் முஸ்லிம் சமூகத்துக்கு மட்டுமே உரியவை அல்ல. மற்ற மதங்களிலும் அவ்வாறே உள்ளன” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.