அமெரிக்க அதிபர் தேர்தலில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு வாக்குப் பதிவு முடிந்ததும் உடனே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
அப்போது, புளோரிடா மாகாணம் பாம் பீச்சில் உள்ள மார்-எ-லாகோ ரிசார்ட்டில் இருந்தபடி குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்பும் தொழிலதிபர் எலான் மஸ்க்கும் தேர்தல் முடிவுகளை பார்த்துக் கொண்டிருந்தனர்.
இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. அதில் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். குடியரசு கட்சி நிர்வாகிகள் சிலரும் ட்ரம்புடன் இருந்தனர். தேர்தல் முடிவு ட்ரம்புக்கு சாதகமாக வெளியானதால் ட்ரம்ப், மஸ்க் உள்ளிட்டோர் உற்சாகமடைந்தனர். ட்ரம்ப் முன்னிலை வகிப்பது பற்றிய செய்திகள் வெளியானதையடுத்து, அங்கு இருந்தவர்களுக்கு விருந்து வழங்கப்பட்டது.
இந்த தேர்தலில் ட்ரம்புக்காக எலான் மஸ்க் சுமார் ரூ.1,000 கோடியை செலவிட்டார். எலான் மஸ்க் எக்ஸ் வலைதளத்தில் “கேம், செட், மேட்ச்” என பதிவிட்டுள்ளார். மார்-ஏ-லாகோ ரிசார்ட் ட்ரம்புக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.