திருமலை: ஆந்திராவில் தெலுங்கு தேசம் கூட்டணி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு புதிய அறங்காவலர் குழுவை அறிவித்தது. இதில் அறங்காவலர் குழு தலைவராக சித்தூரை சேர்ந்த முன்னணி தொலைக்காட்சி நிறுவன அதிபர் ராஜகோபால் நாயுடு (பி.ஆர். நாயுடு) நியமிக்கப்பட்டார்.
உறுப் பினர்களாக ஆந்திரா, தெலங் கானா, தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 24 பேர் நியமிக்கப்பட் டனர். இதில் தமிழகம் சார்பில் கிருஷ்ணமூர்த்தி, ராமமூர்த்தி ஆகிய இருவர் இடம்பெற்று உள்ளனர்.
இந்நிலையில் அறங்காவலர் குழு தலைவராக பதவியேற்க, பிஆர் நாயுடு நேற்று தனது குடும்பத்தாருடன் திருமலைக்கு வந்தார். கோயிலுக்குள் கருடன் சன்னதி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவராக பி.ஆர்.நாயுடு பதவியேற்றார். அவருக்கு தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மேலும் 15 உறுப்பினர்களும் பதவியேற்றனர்.
மாலையில் பி.ஆர்.நாயுடுகூறுகையில், ‘‘கடந்த ஆட்சியினரால் திருமலையில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதை நான் அறிவேன். அவை குறித்து முழு விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறினார்.