சென்னை: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.மலைச்சாமி (87) சென்னையில் புதன்கிழமை காலமானாா். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இபிஎஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கை: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவை முன்னாள் செயலாளரும், ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான மலைச்சாமி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். கழக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் டாக்டர் மலைச்சாமி, சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் திறம்பட பணியாற்றியவர்.
அதேபோல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் மலைச்சாமி மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர், உள்துறைச் செயலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் திறம்பட பணியாற்றியவர். இந்திய ஆட்சிப் பணியில் இருந்தபோது அவர் ஆற்றியுள்ள தன்னலமற்ற மக்கள் பணிகள் பாராட்டுதலுக்குரியவை என்று சொன்னால் அது மிகையாகாது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பேரன்பைப் பெற்றிருந்த மலைச்சாமி, கழகப் பணிகளிலும், கழகத்தின் வளர்ச்சிப் பணிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு பணியாற்றியவர். மலைச்சாமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.