அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று, 47வது அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்டு ட்ரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையிலான உறவு, வலுவான ராஜதந்திர உறவுகள், இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் வெளிப்படையான தனிப்பட்ட அரவணைப்பு ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக இருந்தது.
பிரதமர் மோடி, டொனால்டு ட்ரம்ப் ஆகிய இரு தலைவர்களும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த முன்னுரிமை அளித்தனர், குறிப்பாக பயங்கரவாதத்தை எதிர்கொள்வதிலும், பாகிஸ்தானால் முன்வைக்கப்படும் பிராந்திய அச்சுறுத்தல்களுக்கு தீர்வு காண்பதிலும் முன்னுரிமை அளித்தனர். சுதந்திரமான இந்தோ-பசிபிக் தொடர்பான அவர்களின் பார்வை நெருக்கமான ஒத்துழைப்புக்கு வழிவகுத்தது. கூட்டு ராணுவப் பயிற்சிகள் மற்றும் குவாட் கூட்டணியில் இந்தியாவின் பங்கு உள்ளிட்ட பாதுகாப்பு விஷயங்களில் இரு நாடுகளின் ஒத்துழைப்பை ஆழமாக்கியது.
2019-ல் ஹவுடி மோடி, 2020-ல் நமஸ்தே ட்ரம்ப் போன்ற நிகழ்ச்சிகள் இரு தலைவர்களின் தனிப்பட்ட நெருக்கத்தை காட்டியது. இந்த நிகழ்வுகள் அவர்களின் பரஸ்பர நட்புறவை வெளிப்படுத்தியது. ராஜதந்திர உறவை வலுப்படுத்த உதவியது.
வரி விகிதம் மீதான கருத்து வேறுபாடுகள் போன்ற சவால்கள் இருந்தபோதிலும், இரு தலைவர்களும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினர். கரோனா பெருந்தொற்று காலத்தில் இரு தலைவர்களின் ஒத்துழைப்பு சுகாதார திட்டங்களுக்கும் விரிவடைந்தது.