கமலின் 70வது பிறந்த நாள் இன்று. அவரைப் பற்றிய 10 சுவாரஸ்யமான தகவல்களைப் பற்றிப் பார்ப்போம்.
* களத்தூர் கண்ணம்மாவில் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று பாடி கையெடுத்து கும்பிட்ட சிறுவனை கமல்ஹாசனாக இன்று இந்திய சினிமா வணங்குகிறது. தலைமுறைகளை வென்ற தனி அவதாரத்தை பற்றிய 70 வயதடைந்த இளைஞனின் சிறு தொகுப்பு இது…..
* முதல் படத்திலேயே (களத்தூர் கண்ணம்மா) சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான ஜனாதிபதியின் ராஷ்டிரபதி விருதைப் பெற்றவர் கமல். இந்தியாவில் ஒரே குடும்பத்தில் கமல், சாருஹாசன், சுஹாசினி என மூன்று தேசிய விருது பெற்றதும் அரிதானது.
* நினைத்தாலே இனிக்கும் படம் தான் கமலும் ரஜினியும் சேர்ந்து நடித்த கடைசி படம். இனிமேல் சேர்ந்து நடிப்பதில்லை என முடிவு செய்து விட்டார்கள்.
* கமலுடன் அதிக படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தவர்களில் ஸ்ரீதேவி, ஸ்ரீ ப்ரியா முக்கியமானவர்கள். இதில் ஸ்ரீப்ரியா அவரது கட்சியில் சேர்ந்து இன்னமும் அவருடன் கட்சியில் பயணிக்கிறார்.
* கமலுக்கு சினிமா சென்டிமென்ட்களில் கொஞ்சமும் நம்பிக்கை கிடையாது. ஹே ராம் படத்தின் முதல் வசனமே சாகேத்ராம் திஸ் இஸ் பேக்-அப் டைம் என்றுதான் ஆரம்பிக்கும்.
* அதிஅற்புதமான உலக சினிமாக்களின் அணிவகுப்பு அவரின் ஹோம் தியேட்டர் கலெக்ஷனில் இருக்கிறது. முக்கியமான நூறு படங்களின் கதை, அவை வித்தியாசப்படும் விதம், இயக்குநரின் திறமை என விரல் நுனியில் வைத்திருப்பார் கமல். இத்தகையவர்கள் தமிழ் சினிமாவில் இல்லை என்பதுதான் உண்மை.
* கார்களின் பிரியர் கமல்ஹாசன். ஆறு கார்களை வைத்திருக்கிறார். புதிதாக ஹம்மர் ஹெச் 2 காரை இரண்டு கோடி விலையில் வாங்கி வைத்திருக்கிறார்.
* ஊர்வன, பறப்பன, ஓடுவன என அனைத்தையும் சாப்பிடும் அசைவ பிரியர் கமல். ஆக்டோபஸ் ஒன்றை வெளிநாட்டில் சமைத்து சாப்பிட்டது பற்றி விரும்பி விவரித்து சொல்வதை கேட்பதே சுவாரஸ்யமாக இருக்கும்.
* கமல் ரொம்பவும் ஆசைப்பட்டு விரும்பி முற்றுப் பெறாமல் போன கனவு மருதநாயகம் மட்டும்தான். தகுந்த வாய்ப்பு இருந்தால் அதை இப்போதும் உயிர்பிக்க அவருக்கு விருப்பம் தான். ஆனாலும் அந்த ஆசையை நிறைவேற்றாமல் விட்டது பற்றி அவருக்கு பெரும் வருத்தம் உண்டு.
* ஃபிலிம் ஃபேர் விருதை 18 முறைக்கு மேல் வாங்கிய ஒரே இந்திய நடிகர் கமல் மட்டும்தான். இனிமேல் போதும் என செல்லமாக மறுத்து இளையவர்களுக்கு அந்த விருதை திருப்பிவிட்டார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, பெங்காலி படங்களில் நடித்த ஒரே தமிழ் நடிகரும் கமல்தான்.
* எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதாவிற்கு முறையே ‘நான் ஏன் பிறந்தேன்’, ‘சவாலே சமாளி’ அன்பு தங்கை படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றிய பெருமையும் அவருக்கு உண்டு.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…