புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தின் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோயிலின் சுற்றுப்புறச் சுவரில் விரிசல் கண்டறியப்பட்டுள்ளது.
நவீன் பட்நாயக் தலைமை யிலான பிஜு ஜனதா தள கட்சியின் முந்தைய ஆட்சியில், கோயிலைச் சுற்றி இயந்திரங்களைக் கொண்டு தோண்டியதே விரிசலுக்குக் காரணம் என்று ஒடிசா மாநில பாஜக அரசு குற்றம்சாட்டியுள்ளது.
ஆதாரமில்லை: இதற்கு பதிலளித்த பிஜு ஜனதா தள எம்எல்ஏ கணேஷ்வர் பெஹ்ரா, “எந்த ஆதாரமும் இல்லாமல், எங்களால்தான் கோயில் சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்று பாஜக குற்றம்சாட்டுகிறது. பாஜக தலைவர்கள் என்ன கட்டிடத் துறை வல்லுநர்களா? எங்கள் மீது குற்றம்சுமத்துவதற்கு முன் பாஜக தலைவர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும்” என்று தெரிவித்தார். இதனிடையே விரிசலை உடனேசரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோயில் நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது.
புரி ஜெகந்நாதர் கோயிலின் தலைமை நிர்வாகி அரபிந்தா கூறுகையில், “புரி ஜெகந்நாதர் கோயிலின் சுற்றுப்புறச் சுவரில் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. எங்கள் தரப்பில் தொழில்நுட்பக் குழுவை கொண்டு சில சரிபார்ப்பு வேலைகளை செய்துள்ளோம். எனினும் தொல்லியல் துறையினர் இதை விரைந்து முழுமையாக சரி செய்ய வேண்டும்” என்றார்.