இந்தியாவில் தற்போது நடந்துமுடிந்த டெஸ்ட் தொடரில் பல வரலாற்றுத் தோல்விப் பரிசுகளை இந்திய அணிக்குத் தந்திருக்கிறது நியூசிலாந்து அணி. முதல் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் சொந்த மண்ணில் முதன்முறையாக 50 ரன்களுக்குள் சுருண்டது இந்திய அணி. இரண்டாவது டெஸ்டிலும் தோல்வியடைந்ததன் மூலம், இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் முதன்முறையாக டெஸ்ட் தொடரை இழந்தது. மேலும், 12 வருடங்களுக்குப் பிறகு சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது.
அடுத்ததாக மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி 147 ரன்கள் இலக்கைக் கூட அடிக்க முடியாமல் 24 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் முழுமையாக டெஸ்ட் தொடரை இழந்தது. இத்தகைய மோசமான தோல்விக்கு ஒட்டுமொத்த அணியும் சிறப்பாக செயல்படாததே காரணம் என்றார் கேப்டன் ரோஹித் சர்மா. அதோடு, இந்தத் தொடரில் ஒரு பேட்ஸ்மேனாகவும், கேப்டானாகவும் தானும் பெரிதாக விளையாடவில்லை என்று ரோஹித் ஒப்புக்கொண்டார்.
இருப்பினும், மற்ற வீரர்களைக் காட்டிலும் ரோஹித் சர்மா மீது விமர்சனங்கள் குவிந்தது. அதற்கு, மூன்று டெஸ்டிலும் கேப்டன்சியில் எதிரணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு நகர்வுகளையும் ரோஹித் எடுக்காததே காரணம். இதனால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குச் செல்ல, ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் 5 போட்டிகள் டெஸ்ட் தொடரில் 4-ல் வென்றாக வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு ஏற்பட்டிருக்கிறது.
அணியின் சீனியர்கள் வீரர் விராட் கோலி மற்றும் கேப்டன் ரோஹித் மீது அழுத்தமும் கூடியிருக்கிறது. இவ்வாறான சூழலில்தான் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடத் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றிருக்கிறது சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி. முதல் டி20 போட்டி நாளை தொடங்கவிருக்கும் நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கேப்டன் சூர்யகுமார் யாதவிடம், நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடர் தோல்வியால் ரோஹித் மீதான அழுத்தம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த சூர்யகுமார் யாதவ், “விளையாட்டுகளில் எப்போதும் வெற்றி தோல்வி நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. எல்லோருமே வெற்றிக்காகக் கடினமாக உழைக்கிறார்கள். சில சமயம் அது நடக்கிறது, சில சமயம் நடக்காமல் போகிறது. இதில், எவ்வாறு சமநிலையில் இருப்பது என்பதை ரோஹித்திடமிருந்து மட்டுமே நான் கற்றுக்கொண்டேன். ஒரு கேப்டன் எப்போதுமே வெற்றிபெறவே விரும்புவார். ஆனால், தலைவன் அணி எப்படி விளையாட வேண்டும் என்பதைக் கட்டமைக்க விரும்புகிறார்.
அந்த வகையில் ரோஹித்திடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். அவருடன் நிறைய லீக் கிரிக்கெட் (மும்பை இந்தியன்ஸ்) ஆடியிருக்கிறேன். நான் களத்தில் இருக்கும்போது, அவரின் உடல்மொழி எப்படி இருக்கிறது, ஆட்ட நெருக்கடியை எப்படிக் கையாள்கிறார், பவுலர்களிடம் எப்படிப் பேசுகிறார், எவ்வாறு அமைதியாக இருக்கிறார், மற்றவர்களிடம் எப்படிப் பழகுகிறார் என்பதைக் கவனித்திருக்கிறேன். சமீபத்தில், பெரிய போட்டிகள் மற்றும் இருதரப்பு தொடர்களிலும் அவர் முன்னணியில் இருப்பதையும் பார்த்தேன்.
வீரர்களிடமிருந்து அவர் என்ன விரும்புகிறார் என்பது எனக்குத் தெரியும். நானும் அவ்வாறே செய்ய முயற்சிக்கிறேன். அந்த பாணியை, நானும் கையிலெடுத்தேன். அது நன்றாக வேலை செய்தது என்று எனக்குத் தெரியும். பின்னர், எனது பாணியை சிறிது சேர்த்திருக்கிறேன். அணியை முன்னோக்கி அழைத்துச் செல்கிறேன்.” என்று கூறினார்.