ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட கமலா ஹாரிஸ், இந்தியாவின் நலன்களுக்கு எதிரானவர் என்று குடியரசு கட்சியின் மூத்த தலைவர் ஷலப் குமார் குற்றம் சாட்டி உள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதுதொடர்பாக அந்த கட்சியின் மூத்த தலைவரும் குடியரசு கட்சியின் இந்து கூட்டமைப்பின் நிறுவனருமான ஷலப் குமார் கூறியதாவது:
கமலா ஹாரிஸின் பெயர் மட்டுமே இந்து பெயர் ஆகும். அவரது செயல்பாடுகள் இந்தியாவுக்கு எதிரானவை. சுதந்திரமான காஷ்மீர் உருவாக வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார். காஷ்மீரில் நடைபெறும் தீவிரவாத செயல்களுக்கும், காஷ்மீரில் இந்துக்கள் தாக்கப்படும் சம்பவங்களுக்கும் அவர் கண்டனம் தெரிவிப்பது கிடையாது. வங்கதேசம், கனடாவில் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்தும் கமலா ஹாரிஸ் கவலைப்பட்டது கிடையாது. அவரது தேர்தல் பிரச்சார குழுவில் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் 7 பேர் இடம்பெற்றிருந்தனர்.
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான், சீனாவுடன் கைகோத்து உள்ளது. இது இந்தியா, அமெரிக்காவின் நலன்களுக்கு எதிரானது. இந்த நேரத்தில் இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவு மேலும் வலுவடைய வேண்டும். இரு நாடுகள் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும். இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்கவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு ட்ரம்பும் நெருங்கிய நண்பர்கள். இரு தலைவர்களின் சீரிய தலைமையால் அடுத்த 4 ஆண்டுகள் சிறப்பானதாக அமையும்.
இந்துக்களின் நலன்களை பாதுகாப்பதில் ட்ரம்ப் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார். வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு அவர் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். இதன்காரணமாகவே அமெரிக்காவில் வாழும் இந்துகள் ட்ரம்புக்கு ஆதரவாக வாக்களித்தனர். இவ்வாறு ஷலப் குமார் தெரிவித்தார்.