வாஷிங்டன்:‘‘இந்திய பிரதமர் நரேந்திர மோடி மிகவும் அற்புதமான மனிதர். ஒட்டுமொத்த உலகமும் அவரை விரும்புகிறது’’ என்று அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸும் போட்டியிட்டனர். தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. மொத்தம் உள்ள 538 வாக்காளர்கள் குழு உறுப்பினர்களில் 295 உறுப்பினர்களின் ஆதரவை பெற்று ட்ரம்ப் மீண்டும் அதிபராகி உள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 226 உறுப்பினர்களின் ஆதரவை பெற்று தோல்வியடைந்துள்ளார். 4 ஆண்டு இடைவெளிக்கு பிறகு, ட்ரம்ப் மீண்டும் அதிபராக உள்ளார். இந்தநிலையில், கடந்த 6-ம் தேதி இரவுபிரதமர் நரேந்திர மோடி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு ட்ரம்ப்புக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது, தொழில்நுட்பம், பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி உள்ளிட்ட துறைகளில் இணைந்து பணியாற்ற இரு தலைவர்களும் உறுதிபூண்டனர்.
‘அற்புதமான நாடு இந்தியா’ – அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள ட்ரம்ப் கூறும்போது, ‘‘இந்தியா அற்புதமான நாடு. இந்திய பிரதமர் நரேந்திர மோடி மிகவும் அற்புதமான மனிதர். ஒட்டுமொத்த உலகமும் அவரை விரும்புகிறது. அவர் எனது மிக நெருங்கிய நண்பர். அதிபர் தேர்தலில் நான் வெற்றி பெற்றதும் என்னை முதலில் தொடர்பு கொண்டு வாழ்த்திய தலைவர்களில் அவரும் ஒருவர்’’ என்று தெரிவித்தார்.
தலைவர்கள் உறுதி: பிரதமர் மோடி – ட்ரம்ப் இடையிலான தொலைபேசி உரையாடல் குறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறும்போது, ‘‘அமெரிக்க அதிபர் தேர்தலில் அந்த நாட்டு மக்களின் தீர்ப்பை இந்தியா கொண்டாடுகிறது. தேர்தலில் வெற்றி பெற்ற ட்ரம்ப்பை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார். இரு நாடுகளின் நலன்கள், உலக அமைதி, செழுமைக்காக ஒன்றிணைந்து செயல்பட மோடியும், ட்ரம்ப்பும் உறுதி மேற்கொண்டனர்’’ என்று தெரிவித்தார்.