புதுடெல்லி / சென்னை: அமெரிக்க தேர்தல் முடிவு எதி ரொலியாக நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,320 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.57,600-க்கு விற்பனையானது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, கடந்த மார்ச் 28-ம் தேதி ஒரு பவுன் ரூ.50 ஆயிரம் என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியது. இதைத் தொடர்ந்து விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் அன்றைய தினம் பவுனுக்கு ரூ.2,080 குறைந்தது. பின்னர் தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்தது. குறிப்பாக தீபாவளி நாளன்று (அக்.31) ரூ.59,640 என்ற வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது.
அதன் பின்னர் ஏற்ற இறக்கமாக இருந்த தங்கத்தின் விலை, நேற்று அதிரடியாக குறைந்தது. அதன்படி, பவுனுக்கு ரூ.1,320 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.57,600-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.165 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.7,200-க்கு விற்பனையானது. இதேபோல, ஒரு கிராம் வெள்ளி ரூ.3 குறைந்து, ரூ.102-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.3 ஆயிரம் குறைந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.
இதுகுறித்து சென்னை தங்க, வைர நகை வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் சாந்தகுமார் கூறியதாவது: அமெரிக்க தேர்தல் முடிவு நேற்று முன்தினம் வெளியானது. அமெரிக்க அதிபராக தான் பொறுப்பேற்கும் பட்சத்தில் உலக அமைதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் போர் இல்லாத சூழலை உருவாக்க முயற்சிப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். தங்கத்தின் விலை ஏற்றத்துக்கு போரும் ஒரு காரணம் ஆகும். எனவே, அதிபராக ட்ரம்ப் தேர்வானதால் பங்கு சந்தை, கிரிப்டோ போன்றவை ஏற்றம் கண்டன. முதலீட்டாளர்கள் பங்குகளின் மீதான முதலீடுகளை அதிகரித்தனர். இதன் காரணமாக தங்கம் விலை வெகுவாக குறைந்தது. தங்கத்தின் மீது முதலீடு செய்ய இது சிறந்த காலம். இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்க தேர்தலுக்கு முன்பு சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை பெரும் ஏற்றம் கண்டது. கடந்த 3 மாதத்தில் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 காரட் தங்கத்தின் விலை 400 டாலர் உயர்ந்தது. ட்ரம்ப் வெற்றிக்கு பிறகு 100 டாலர் அளவில் சரிந்து 2,649 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை சரிவு குறித்து பொருளாதார நிபுணர்கள் கூறும்போது, “அமெரிக்காவின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று பிரச்சாரத்தின்போது ட்ரம்ப் தெரிவித்திருந்தார். 10 முதல் 60 சதவீதம் வரை இறக்குமதி வரிகள் விதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அவர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அமெரிக்க டாலர், கடன் பத்திரங்களின் மதிப்பு உயர்ந்துள்ளது. டாலர் மதிப்பு உயரும்போது தங்கத்தின் மதிப்பு சரிவது வழக்கம். அதன் விளைவாக தற்போது சர்வதேச அளவில் தங்கத்தின் விலை சரிந்துள்ளது” என்று தெரிவித்தனர்.
அதிபர் ஜோ பைடன் கிரிப்டோகரன்சி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், கிரிப்டோகரன்சியை வலிமைமிக்கதாக மாற்றுவேன் என்று ட்ரம்ப் அறிவித்தார். அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில், பிட்காயின் மதிப்பு 6,600 டாலர் உயர்ந்து 75,999 டாலராக உச்சம் தொட்டது.
ட்ரம்ப்பின் முந்தைய ஆட்சிக் காலத்தில் அமெரிக்கா – ஈரான் இடையே மோதல் தீவிரமடைந்தது. இந்நிலையில், ட்ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் ஈரானின் நாணய மதிப்பு இதுவரை இல்லாத அளவில் கடுமையாக சரிந்துள்ளது.