சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று அதிகாலை முதலே விட்டுவிட்டு மழை பெய்துவந்த நிலையில் மாலை 6 மணி நிலவரப்படி மணலி புதுநகரில் 11 செ.மீ, மாதவரத்தில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் முதலே விட்டுவிட்டு மழை பெய்தது.
நேற்றும் அதிகாலை முதலே லேசானது முதல் மிதமான மழை பெய்து வந்தது. இதனால் நேற்று காலை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என்ற மாணவர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், விடுமுறை அறிவிக்கப்படாததால், ஏமாற்றத்துடன் சாரல் மழையில் நனைந்தபடி மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்றனர்.
நாள் முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்ததால், நேற்று பெரும்பாலான பள்ளிகளில் வகுப்புகளை சீக்கிரமாகவே முடித்து, வழக்கமான நேரத்துக்கு முன்னதாகவே மாணவர்களை வீட்டுக்கு அனுப்பினர். 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகளும் நேற்று மாலை ரத்து செய்யப்பட்டன. தொடர் மழை காரணமாக சென்னை மாநகர சாலைகளில் அவ்வப்போது மழைநீர் தேங்குவதும், வடிவதுமாக இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர்.
சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டு மையத்தில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக மணலி புதுநகரில் 12 செ.மீ, மாதவரத்தில் 10 செ.மீ, அம்பத்தூரில் 8 செ.மீ, மணலி மற்றும் கொளத்தூரில் 8 செ.மீ மழை பதிவானது.
நவ.13-ம் தேதி வரை சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.