ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான் அரசின் பாதுகாப்பு அமைச்சருடன் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி முதல்முறையாக பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.
ஆப்கானிஸ்தானில் கடந்த 1994-ம் ஆண்டு முல்லா உமர் மற்றும் அப்துல் கனி பராதர் இணைந்து தலிபான் இயக்கத்தைதொடங்கினர். தீவிரவாத செயலில் ஈடுபட்டு வந்த இந்த இயக்கம், 1996-ல் ஆட்சியை கைப்பற்றியது. 2001-ம் ஆண்டு அல் காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை பிடிப்பதற்காக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை ஆப்கானிஸ்தானில் முகாமிட்டது. இதனால் தலிபான் ஆட்சி 2001-ல் முடிவுக்கு வந்தது. அதன் பிறகு அமெரிக்க ஆதரவு பெற்ற அரசு ஆட்சி செய்தது. 2021-ல் அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து, தலிபான்கள் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்சியை கைப்பற்றினர்.
தலிபான்களின் ஆட்சியை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. இதனால், இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆப்கானிஸ்தானுடனான தூதரக உறவை முறித்துக் கொண்டன. அதன் பிறகு இரு நாடுகளுக்கிடையே எவ்வித உறவும் இல்லை.
இதனிடையே, ஆப்கானிஸ்தான் மண்ணிலிருந்து இந்தியாவுக்கு எதிரான எவ்வித செயலிலும் ஈடுபட யாரையும் அனுமதிக்க மாட்டோம் என அந்நாட்டின் சார்பில் தொடர்ந்து உறுதி அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஆப்கானிஸ்தானுடனான உறவை புதுப்பிக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதன்படி, அந்நாட்டுக்கு சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை இணைச் செயலாளர் ஜே.பி.சிங், காபூல் நகரில் தலிபான் அரசின் பாதுகாப்பு அமைச்சரும் முல்லா உமரின் மகனுமான முகமது யாகுப் முஜாஹித்தை நேற்று முன்தினம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முத்தாகி மற்றும் முன்னாள் அதிபர் ஹமீது கர்சாய் உள்ளிட்டோரையும் ஜே.பி.சிங் சந்தித்துப் பேசினார். கடந்த 4 ஆண்டுகளில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது இதுவே முதல் முறை ஆகும்.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இந்த சந்திப்பின்போது, மனிதாபிமான ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்களில் இரு நாடுகளுக்கிடையிலான உறவை புதுப்பிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர்ந்து பேச்சுவார்த்தையை தொடர இருதரப்பும் விருப்பம் தெரிவிக்கப்பட்டது” என கூறப்பட்டுள்ளது.