“எங்களிடம் 5 ஆண்டுகள் விட்டுப் பாருங்கள்; டோக்கியோவைப் போல் மாற்றிக் காட்டுகிறோம்” – அன்புமணி

ராணிப்பேட்டையில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக நேற்று (07-ம் தேதி) இரவு `தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கான அரசியல்’ பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், மாநிலத் துணைத் தலைவர் கே.எல்.இளவழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், “அடுத்த தலைமுறையாவது தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதற்காகத்தான் 45 ஆண்டுகாலமாக நம்முடைய மருத்துவர் அய்யா, ஆயிரக்கணக்கான மது ஒழிப்புப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். இது ஏதோ விளம்பரத்துக்கான அரசியல் கிடையாது. சமீபத்திலும், கள்ளக்குறிச்சியில் ஒருத்தர் விளம்பரத்துக்காக மாநாடு நடத்தினார். மது ஒழிப்பு மாநாட்டை நடத்தி, அதில் தமிழ்நாட்டின் அமைச்சர்களை மேடையில் அமர்த்தி பேச வைத்தார். அந்த மாநாட்டில் பேசிய அமைச்சர்கள், `சாராயக் கடைகளை மூடும் அதிகாரம் மத்திய அரசிடமும், மோடியிடமும்தான் இருக்கிறது’ என்றனர். இந்த மாதிரியான கேடுகெட்ட விளக்கம் யாராவது கொடுப்பார்களா? முதலமைச்சர் ஓர் கையெழுத்துப் போட்டால் போதும். சாராயக் கடைகளை மூடிவிடலாம்.

அன்புமணி ராமதாஸ்

ஆனால், சாராயக் கடைகளை மூட அவர்களுக்குத் துப்புக் கிடையாது. அதன் மூலம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், தமிழ்நாடு இன்று குடிகார நாடாக மாறிவிட்டது. `குடிகார நாடு’, `கஞ்சா நாடு’, `கொலைகார நாடு’ எது என்றால், நம்முடைய தமிழ்நாடு என்றாகிவிட்டது. பழைய `அம்பாஸடர் கார்’ போன்றது, தி.மு.க-வின் ஆட்சி. மக்கள்தான் காலத்திற்கேற்ப மாற வேண்டும். இவர்களெல்லாம் போதும். `திராவிடம்’, `திராவிட மாடல்’, `கத்திரிக்காய்’, `வெண்டைக்காய்’ என வசனம் பேசிக்கொண்டே இருப்பார்கள். ஒருத்தர் தமிழ்தேசியம், ஒருத்தர் திராவிடம், ஒருத்தர் சனாதனம், ஒருத்தர் பாசிசம், ஒருத்தர் கம்யூனிஸம் பேசுகிறார். இவர்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள். பேசிப்பேசியே மக்களையும், நாட்டையும் நாசப்படுத்தியது போதும்.

கடலூர் மாவட்டத்தில் ஒரு கும்பல் மது குடித்துக் கொண்டிருந்தபோது, அந்தப் பக்கமாக சென்ற ஒருப் பையனைப் பிடித்து அடித்திருக்கிறார்கள். அடி என்றால் சாதாரண அடிக் கிடையாது, மோசமான அடி. அந்தப் பையனை பார்ப்பதற்காக நம்முடைய வன்னியர் சங்க மாநிலத் தலைவரும், பா.ம.க மாவட்டச் செயலாளரும் போனார்கள். இதற்கு எதிர்மறையாகப் பேசிய குடிகாரக் கும்பல், `வன்னியர் சங்கத் தலைவரின் தலையை எடுப்போம்’ என என்னென்னமோ பேசுகிறது. ஒருவன் மேடைப் போட்டு, இப்படி மைக்கில் பேசுகிறான். இன்று வரை அவன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுதான் திராவிட மாடலா? முதலமைச்சர் நியாயமாக இருந்திருந்தால், அவனைக் கைது செய்து `குண்டர்’ சட்டத்தில் சிறையிலடைத்திருக்க வேண்டும்.

இதுதான் அடிப்படை நியாயம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால், நம்முடைய பா.ம.க மாவட்டச் செயலாளர் உட்பட பத்து பேர் மீது எஸ்.சி – எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் போட்டுள்ளார்கள். இது எவ்வளவுப் பெரிய மோசடி.

கூட்டத்தில் கலந்துகொண்ட பா.ம.க தொண்டர்கள்

தமிழ்நாடு காவல் துறைக்குத் துப்புக் கிடையாதா? கோழையா நீங்கள்? எஸ்.சி – எஸ்.டி சட்டத்தை தவறாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அமைதியாக, வேடிக்கைப் பார்ப்பதாக நினைக்கிறீர்களா? இன்றைக்கு வடதமிழ்நாடு அமைதியாக இருக்க ஒரே காரணம் எங்களின் மருத்துவர் அய்யா மட்டுமே. நாங்கள் ராணுவத்தையே பார்த்தவர்கள். எங்கள் பிள்ளைகளிடம் `வளர்ச்சி அரசியல்’ குறித்து பேசி, கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறேன். பழைய நிலைக்குக் கொண்டுப் போகாதீர்கள். எங்களுக்கு அது வேண்டாம். இது தான் தி.மு.க-வின் சூழ்ச்சி.

தி.மு.க மீது மக்கள் பயங்கர கோபத்தில் இருக்கிறார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க ஆட்சிக்கு வராது. தி.மு.க ஆட்சிக்குவந்த மூன்றாண்டு காலத்தில் ஆறாயிரம் கொலைகள், ஐம்பதாயிரம் குற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன. இருபது விசாரணைக் கைதிகள் கொலைச் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதாவது, மர்மமான முறையில் இறந்திருக்கிறார்கள். அமெரிக்காவில் என்னென்ன போதைப் பொருள்கள் கிடைக்கின்றதோ, அவையெல்லாம் தமிழ்நாட்டிலும் கிடைக்கின்றது. இது பற்றி முதலமைச்சருக்கு எந்தக் கவலையும் கிடையாது. சுதந்திரப் போராட்ட `தியாகி’ செந்தில் பாலாஜியை மட்டுமே முதலமைச்சர் நம்பி இருக்கிறார். இதே ஸ்டாலின், அன்று தி.மு.க-வின் செயல் தலைவராக இருந்தபோது, செந்தில் பாலாஜிக்கு `மோசடிக்காரர்’, `ஊழல்வாதி’, `குற்றவாளி’, `கொள்ளைக்காரர்’ என ஏதேதோ பெயர்கள் வைத்தார். இப்போது, தியாகியாக்கி விட்டார். இதுதான் திராவிடத்தின் கேடுகெட்ட மாடல்.

முதலமைச்சர் ஸ்டாலின்

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தி.மு.க 510 வாக்குறுதிகளைக் கொடுத்தது. அதில், இன்னமும் 450 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. கேட்டுப் பாருங்கள், `90 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம்’ என்று அவர்களே சொல்லிக்கொள்வார்கள். என்னுடனான விவாதத்துக்கு வருகிறீர்களா? மேடைப் போடுங்கள், யார் வேண்டுமானாலும் வாருங்கள். எவ்வளவு காலமாக ஏமாற்றிக் கொண்டிருப்பீர்கள். நிர்வாகம் செய்யத் திறமையும், துப்பும் கிடையாது. ஒருசில ஊடக நண்பர்களிடம் எனக்கு வருத்தமும் இருக்கிறது. அரசாங்கம் தவறுச் செய்தால், அப்படியே மூடி மறைக்கிறீர்கள். சிறு மழைக்கே படகுகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். 57 ஆண்டுகாலமாக ஆட்சி செய்தும், மழைவந்தால் படகுகளை தேடிச்செல்வது தான் முன்னேற்றமா? எங்களிடம் ஐந்து ஆண்டுகள் விட்டுப் பாருங்கள். ஜப்பான் தலைநகரம் டோக்கியோவைப்போல் மாற்றிக் காட்டுகிறோம். சமூக நீதிக்கும், தி.மு.க-வுக்கும் எள்ளளவு சம்பந்தம் கிடையாது. கலைஞரின் மனதில் ஈரம் இருந்தது. இப்போது இருக்கிற ஸ்டாலினைச் சுற்றி நான்கைந்து அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அமைச்சர்கள் கிடையாது; வியாபாரிகள். இதே நிலைத் தொடர வேண்டுமா? மாற்றத்தைக் கொடுங்கள். அடுத்த தலைமுறையினரை வழிநடத்த எனக்கொருமுறை வாய்ப்புக் கொடுங்கள்’’ என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.