விழுப்புரம்: திண்டிவனம் அருகே உள்ள மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து குற்றஞ்சாட்டி வந்தனர்.
மேலும் சார்பதிவாளர் அலுவலகத்தின் அருகே இ.சேவை மையம் வைத்து நடத்தி வரும் ஒருவர் சார் பதிவாளர் அலுவலகத்தின் இடைத்தரகராக பணியாற்றி பொது மக்களிடம் லஞ்சப் பணத்தை அவ்வப்போது வாங்கி கொடுத்து வருவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது
இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி அழகேசன் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட போலீஸார் நேற்று மாலை மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் சென்று பணியில் இருந்தவர்களை அலுவலகத்திற்குள் அமர வைத்து விட்டு அலுவலகத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்
அந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1.30, 340 பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் சார் பதிவாளர் வெங்கடேஸ்வரி மற்றும் புரோக்கர் உள்ளிட்ட சார் பதிவு அலுவலக ஊழியர்களிடம் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து முக்கிய கோப்புகளை கைப்பற்றினர். லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரல் கைப்பற்றப்பட்ட கோப்புகளில் முக்கியமான ஆதாரங்கள் ஏதேனும் சிக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று (நவ.8) மயிலம் சார் சார்பதிவாளர் வெங்கடேஸ்வரி உள்ளிட்ட 6 பேர்மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.