அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய ஆஸி. ஊடகத்துக்கு கனடாவில் தடை: இந்தியா கண்டனம்

சென்னை: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடனான நேர்காணலை ஒளிபரப்பிய ‘ஆஸ்திரேலியா டுடே’ ஊடகத்துக்கு கனடாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. பத்திரிகை சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில் தங்களது செயல்பாடு தொடர்ந்து இருக்கும் என ஆஸ்திரேலியா டுடே தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆஸ்திரேலியா டுடே ஊடக நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியர் ஜிதார்த் ஜெய் பரத்வாஜ் கூறுகையில், “மக்களிடம் சொல்ல வேண்டிய செய்திகளை சொல்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எத்தனை தடை வந்தாலும் நாங்கள் எங்களது நிலைப்பாட்டில் நிற்போம். பத்திரிகை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை நினைவூட்டும் வகையில் எங்களுக்கு இந்நேரத்தில் ஆதரவு கிடைத்துள்ளது. தொடர்ந்து வெளிப்படைத்தன்மையுடன் நாங்கள் செயல்படுவோம்” என்றார்.

ஆஸ்திரேலிய நாட்டில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், நேர்காணலில் பங்கேற்றார். அதில் இந்தியா – கனடா இடையேயான உறவு குறித்தும், கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதம் குறித்தும் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதை ஆஸ்திரேலியா டுடே ஒளிபரப்பியது. இந்நிலையில், வியாழன் அன்று கனடா அந்த ஊடக நிறுவனத்தை தடை செய்தது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

“இது எங்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கிறது. மேலும், விசித்திரமாகவும் உள்ளது. கருத்து சுதந்திரம் சார்ந்த கனடாவின் பார்வையை இந்த விவகாரம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை துறை அமைச்சர் மூன்று விஷயங்கள் குறித்து ஊடகத்துடன் பேசி இருந்தார். எந்தவித ஆதாரமும் இல்லாமல் கனடா குற்றச்சாட்டு வைப்பதாக அவர் சொல்லி இருந்தார். அதே போல கனடாவில் இந்திய தூதரக அதிகாரிகளை கண்காணிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என சொல்லி இருந்தார்” என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார். இந்தியா – கனடா இடையேயான கசப்பான உறவுக்கு மத்தியில் இது நடந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.