சென்னை: மெரினா லூப் சாலையில் நள்ளிரவில் போலீஸாருடன் தகராறு செய்த சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலட்சுமிக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெரினா லூப் சாலையில் நள்ளிரவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை ரோந்துப் பணியில் ஈடுபட்ட போலீஸார் எடுக்கும்படி கூறியுள்ளனர். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்த காரில் வந்த வேளச்சேரியைச் சேர்ந்த சந்திரமோகன் மற்றும் அவரது தோழி மயிலாப்பூரைச் சேர்ந்த தனலட்சுமி ஆகிய இருவரும் காவல்துறையினரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
அதையடுத்து இருவர் மீதும் மயிலாப்பூர் போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செயது இருவரையும் கைது செய்தனர். இதையடுத்து, இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் கோரி இருவரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்தனர். இருவரது ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இருவரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி ஏ.டி.ஜெகதீஸ்சந்திரா முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், “இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இருவரும் பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக,” தெரிவிக்கப்பட்டது. “அதற்காக எத்தனை நாட்கள் இருவரையும் சிறையில் வைக்க போகிறீர்கள்?” என கேள்வி எழுப்பிய நீதிபதி, இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், சந்திரமோகன் மட்டும் தினசரி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.