நடந்து முடிந்துள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பின் வெற்றி என்பது எதிர்வரக்கூடிய நாள்களில் அமெரிக்கா மட்டுமின்றி உலக பொருளாதாரத்தில் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதுதான் நிபுணர்கள் மத்தியில் எழுந்துள்ள மில்லியன் டாலர் கேள்வி.
தனது தேர்தல் பிரசாரத்தின்போது அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மீதும் வரிகளை விதிக்கப் போவதாக அவர் கூறியிருந்ததே இந்த சந்தேகத்துக்குப் பின்னால் இருக்கும் காரணம்.
மற்ற எந்த நாட்டையும் விட அறிவியல் ஆராய்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் அமெரிக்கா ஏராளமான நிதியை செலவிடுகிறது. இதன் விளைவாக கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒப்பிட்டால் மற்ற நாடுகளைவிடவும் அதிக நோபல் பரிசுகளை குவித்துள்ளது. அமெரிக்காவின் வளர்ச்சி மற்ற நாடுகளுக்கு ஒரு கனவு போன்றது. எனினும் உலகின் மற்ற நாடுகள் அமெரிக்காவை சார்ந்திருப்பதை தவிர்க்க தங்கள் சக்திக்குட்பட்ட அனைத்தையும் செய்ய வேண்டும். ஒருவேளை இந்த தேர்தலில் கமலா ஹாரிஸ் வென்றிருந்தால் இந்த நிலையில் பெரிய மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்திருக்காது.
ட்ரம்ப் தனது முந்தைய ஆட்சியில் எடுத்த முக்கிய முடிவுகளில் ஒன்று, உள்நாட்டு வியாபாரிகளை பாதுகாக்கும் நோக்கில் கிட்டத்தட்ட அமெரிக்காவுடன் வர்த்தக பங்குதாரராக இருக்கும் எல்லா நாடுகளின் மீதும் அதிக வரிகளை விதித்தது. உதாரணமாக, 2018-ஆம் ஆண்டு உலகம் முழுவதிலுமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாஷிங் மெஷின்களுக்கு ட்ரம்ப் விதித்த வரிகள் காரணமாக, அமெரிக்க மக்கள் இந்த தயாரிப்புகளுக்கு 12% கூடுதலாக வரி செலுத்துகின்றனர்.
அதன் பின்னர் வந்த ஜோ பைடன், ட்ரம்ப் விதித்த முந்தைய வரிகளில் சிலவற்றை அதிகரித்தார். மின்சார வாகனங்களுக்கு 100%, சோலார் செல்களுக்கு 50%, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பேட்டரிகளுக்கு 25% உயர்த்தப்பட்டது. பருவநிலை மாற்றம் உச்சத்தில் இருக்கும் காலகட்டத்தில், உற்பத்தியைப் பாதுகாக்கும் நோக்கில் ஆற்றல் மாற்றத்தின் வேகத்தை குறைக்கவே இந்த இந்த வரி உயர்வு என்று காரணம் சொல்லப்பட்டது.
அமெரிக்காவின் தொழில் கொள்கைகள் உள்நாட்டு நலனுக்கு முக்கியத்துவம் தருவதாக இருந்தாலும், அது உலகின் மற்ற நாடுகள் மீதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சீனா, பல ஆண்டுகளால ஏற்றுமதி அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சிக்குப் பிறகு, தற்போது அதிக உள்நாட்டு நுகர்வுகளை ஊக்குவிக்கவும் அதன் வர்த்தக பங்குதாரார்களை பெருக்கவும் முயற்சிக்கிறது.
இன்னொரு பக்கம் ஐரோப்பிய நாடுகளின் பட்ஜெட்டில் கடும் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், மானிய போட்டியில் அவை ஏராளமான நிதியை செலவிடுகின்றனர். உதாரணமாக மந்தமான வளர்ச்சியை எதிர்கொண்டிருக்கும் ஜெர்மனி, அமெரிக்கா வழங்கும் மானியங்களுடன் போட்டி போடுகிறது. ஸ்வீடன் பேட்டரி தயாரிப்புக்கு பேர் போன நார்த்வோல்ட் நிறுவனம் தங்கள் நாட்டில் உற்பத்தியை தொடர ஜெர்மனி €900 மில்லியன் மானியம் வழங்குகிறது.
உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த மானியக் கொள்கைகள் மூலம், ஒட்டுமொத்த ஆப்பிரிக்க கண்டத்தையும் மின்மயமாக்குதல் போன்ற அவசர தேவைகளுக்கு நிதியளிக்க முடியும். இதற்கிடையே, கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை பின்னுக்குத்தள்ளி இயற்கை வளங்களுக்காக ஆப்பிரிக்காவில் மிகப்பெரிய முதலீட்டாளராக சீனா கால்பதித்துள்ளது.
இவற்றை சரிசெய்ய எதிர்வரும் ட்ரம்ப் ஆட்சி ஒருவாய்ப்பாக அமையலாம்.
அதேபோல, புதினிடம் பைடன் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி உக்ரைன் மீதான படையெடுப்பு, ஆயிரக்கணக்கான பொதுமக்களின் மரணங்கள், எரிசக்தி பிரச்னை உள்ளிட்ட விவகாரங்களை முன்பே தவிர்த்திருக்கவும், போருக்கு முன்பே உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கியிருக்கவும் முடியும். ஆனால் இதற்கு முக்கிய காரணம் ஐரோப்பாதான். ரஷ்ய எரிவாயுவை அவர்கள் பிரதானமாக சார்ந்திருந்ததே இந்த பிரச்னைக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக தனது முந்தைய ஆட்சிகாலத்தில் ஜெர்மனியை தெளிவாக எச்சரித்திருந்தார் ட்ரம்ப்.
சோலார் பேனல்கள் மற்றும் மின்சார வாகனங்கள் போன்ற சீன தொழில்நுட்பத்தின் மீதான அதன் வரி யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலம் சீனா தன்னுடைய தொழில்துறை பிரச்னைகளை சரிசெய்ய ஐரோப்பா உதவ முடியும்.
பதிலாக, அமெரிக்காவிலிருந்து அதிக அளவு திரவ வாயுவை இறக்குமதி செய்வதற்குப் மாற்றாக, ஐரோப்பா தனது சொந்த ஆற்றலை அதிக அளவில் உற்பத்தி செய்யும். மேலும் உக்ரைன் மீதான படையெடுப்பை முடிவுக்குக் கொண்டுவர சீனாவைக் கொண்டு ரஷ்யாவின் மீது அபரிமிதமான செல்வாக்கைப் பயன்படுத்த முடியும்.
இது ஐரோப்பா மற்றும் சீனாவுக்கு மட்டுமல்ல. மனித வாழ்வின் அனைத்து முக்கிய பரிமாணங்களிலும் பல ஆண்டுகளாக தொடர்ச்சியான முன்னேற்றத்திற்குப் பிறகு, உலகம் தற்போது பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது.
2008-09 காலகட்டத்தில் இருந்ததைப் போன்ற அளவில் உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் பட்டினியை எதிர்கொள்கின்றனர். காசா, சூடான், மியான்மர், சிரியா என இப்போது லெபனானையும் போர் மேகம் சூழ்ந்துள்ளது. 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு இவ்வளவு உயிரிழப்புகளை உலகம் இப்போதுதான் பார்க்கிறது.
அமெரிக்க வேலைகளை வெளிநாடுகளுக்கு அவுட் சோர்ஸ் செய்வதை விமர்சித்து வந்தவர்களில் முதன்மையானவர் ட்ரம்ப். இது, அவரது 2.0 ஆட்சியின்போது இந்திய வர்த்தகத்தில் தாக்கம் ஏற்படுத்தலாம் என்றும் கருதப்படுகிறது. அதேவேளையில், சீனாவுக்கு பதிலாக இந்தியாவுக்கே ட்ரம்ப் முன்னுரிமை அதிகம் வழங்குவது உறுதி என்பதால் இந்தியப் பொருளாதாரத்துக்கு நல்வாய்ப்பு ஓங்கும் என்ற கருத்தும் கவனிக்கத்தக்கது.
நல்லதோ கெட்டதோ, பிற நாட்டு விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீட்டை ட்ரம்ப்பின் புதிய நிர்வாகம் மாற்றிவிடப்போவதில்லை. மேலும் உலக அமைதி, பருவநிலை பிரச்னை, தாராளமயமாக்கல் போன்றவற்றிலும் எந்தவொரு பெரிய முயற்சியும் எடுக்கப்படப் போவதில்லை என்கின்றனர் வல்லுநர்கள்.
அமெரிக்காவின் வருங்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதை நம்மால் கணிக்க முடியாது. ட்ரம்ப்பின் மறுவருகை கடந்த 10 ஆண்டுகளின் நீட்சியாகக் கூட தொடரலாம். கடுமையான வரிக் கொள்கைகளும், அமெரிக்காவை வல்லரசாக மாற்றிய நிறுவனங்களை அழிக்கும் நடவடிக்கைகளும் அதன் பொருளாதாரத்தை முக்கியத்துவம் குறைந்ததாக மாற்றலாம்.
எதுவாக இருந்தாலும் இது அமெரிக்க மக்கள் எடுத்த முடிவு. என்றாலும் இதன் சாதக பாதகங்களையும், தாக்கங்களையும் உலகின் மற்ற நாடுகளும் அனுபவிக்கத்தான் வேண்டும்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.