Tejasvi Jaiswal, Ranji Trophy Updates: இந்திய அணியின் மூன்று ஃபார்மட்களிலும் தற்போது ஓப்பனராக கலக்கிக்கொண்டிருப்பவர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) எனலாம். தற்போது டெஸ்ட் சீசன் என்பதால் அதிகம் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இவரது அதிரடி பாணி டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு பலம் சேர்த்திருக்கிறது. அதேநேரத்தில், வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் மூலம் இந்தியாவின் ஓடிஐ அணியிலும் நிரந்தர இடத்தை உறுதிசெய்வார் என நம்பலாம்.
அதுவும் இப்போதே இவரை அனைவரும் இடதுகை சேவாக் என்றழைக்கும் அளவிற்கு திறன்களை பெற்றுள்ளார். இன்னும் அனுபவமும், போட்டி குறித்து விழிப்புணர்வும் அதிகரிக்கும்போது யஷஸ்வி ஜெய்ஸ்வாலிடம் இருந்து இன்னும் பெரிய பெரிய இன்னிங்ஸ்களை நாம் காணலாம். வெறும் 22 வயதிலேயே இத்தனை உயரங்களை எட்டிவிட்டார் என்றாலும் இன்னும் அவர் உயரங்களை எட்ட வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது.
கலக்கும் யஷஸ்வியின் சகோதரர்
அவர் சர்வதேச அளவிற்கு அழைத்துச்சென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்போது அவரை ரூ.18 கோடி கொடுத்து முதன்மையான வீரராக தக்கவைத்திருக்கிறது. மிக எளிய பின்னணியில் இருந்து இத்தனை பெரிய உயரத்தை அடைந்துள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் குடும்பத்திற்கு தற்போது மற்றொரு நற்செய்தியும் கிடைத்திருக்கிறது. யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் மூத்த சகோதரர் தேஜஸ்வி ஜெய்ஸ்வால் கடந்த மாதம் ரஞ்சி கோப்பை தொடரில் அறிமுகமான நிலையில், தற்போது அரைசதம் விளாசி பலரின் கவனத்தையும் கவர்ந்துள்ளார்.
தம்பி யஷஸ்வி ஜெய்ஸ்வாலை போலவே, தேஜஸ்வியும் இடதுகை பேட்டர் ஆவார். ஆனால், இவர் ஓப்பனிங்கில் இல்லாமல் 4ஆவது இடத்தில் மிடில் ஆர்டரில் விளையாடக்கூடியவர். யஷஸ்வியை போலேவ இவரும் வலது கையில் பார்ட் டைம்மராக பந்துவீசக்கூடியவர். ஆனால், யஷஸ்வி லெக் ஸ்பின்னர் என்றால் தேஜஸ்வி மீடியம் பேஸர் ஆவார். அதேபோல், ரஞ்சி கோப்பை தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மும்பை அணிக்காக விளையாடும் நிலையில், அவரது மூத்த சகோதரர் தேஜஸ்வி ஜெய்ஸ்வால் திரிபுரா அணிக்காக விளையாடி வருகிறார்.
தேஜஸ்வி ஜெய்ஸ்வால்: 60 பந்துகளில் அரைசதம்
ரஞ்சி கோப்பை தொடரில் மேகாலயா அணிக்கு எதிராகவும், மும்பை அணிக்கு எதிராகவும் தேஜஸ்வி சோபிக்க தவறினார். ஆனால் பரோடா அணிக்கு எதிரான தனது மூன்றாவது போட்டியில் சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசி உள்ளார். 60 பந்துகளில் தேஜஸ்வி அரைசதம் விளாசியிருந்ததால் நிச்சயம் சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிவாலிக் சர்மாவின் லெக் ஸ்பின்னில் சிக்கி தேஜஸ்வி 82 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர் சதம் விளாசாவிட்டாலும் பலரின் கவனமும் தற்போது இவர் மீது திரும்பியுள்ளது.
யஷஸ்வி – தேஜஸ்வி: விரைவில்…!
27 வயதான தேஜஸ்வி ஜெய்ஸ்வால் தொடர்ச்சியாக இதுபோன்று சிறப்பான திறனை வெளிக்காட்டினால், தம்பியை போன்று இந்திய அணியில் விளையாடும் தூரம் வெகுதூரத்தில் இல்லை எனலாம். அதுவும் மிடில் ஆர்டரில் மீடியம் பேஸர், ரஞ்சியில் சிறப்பாக விளையாடினால் நிச்சயம் இந்திய அணி வாய்ப்பும் கிடைக்கும்.
ரஞ்சி கோப்பையில் சிறப்பாக விளையாடி திறனை வெளிக்காட்டினால் அவர்களுக்கு நிச்சயம் இந்திய அணியில் இடமுண்டு என்ற நம்பிக்கையை இந்திய அணி நிர்வாகமும், தேர்வுக்குழுவும் அளித்திருக்கிறது. வயதோ, பின்னணியோ தேவையில்லை திறனும், நம்பிக்கையும் இருந்தால் யஷஸ்வி – தேஜஸ்வி இருவரும் ஒரே போட்டியில் விளையாடும் வாய்ப்பும் விரைவில் ஏற்படலாம்.