சென்னை: மும்பை ரயில்வேக்கு ஏசி மின்சார ரயில்களை தயாரித்து வழங்கப்படுவதால், சென்னைக்கு ஒதுக்கப்பட்ட ஏசி புறநகர் மின்சார ரயில் தயாரிக்கும் பணியை அடுத்த நிதியாண்டில் (2025-26-ம் நிதியாண்டில்) தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஐ.சி.எஃப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகப்புகழ் பெற்ற ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையாக சென்னை ஐ.சி.எஃப் திகழ்கிறது. இங்கு பல்வேறு வகைகளில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. தற்போது இங்கு, வந்தே பாரத் ரயில் தயாரிப்பில் கவனம் செலுத்தப்படுகிறது. இதுதவிர, எல்.எச்.பி என்னும் நவீன பெட்டிகள், ஏசி மின்சார ரயில் பெட்டிகள் உட்பட பல்வேறு ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, தெற்கு ரயில்வேக்கு இரண்டு ஏசி மின்சார ரயில்கள் தயாரித்து வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றில் ஒரு ரயில் வரும் டிசம்பரில் தயாரித்து வழங்கப்படும் என்று ஐ.சி.எஃப் தரப்பில் கடந்த மாதம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த ரயில் தயாரிப்பு பணி மேலும் தாமதம் ஏற்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, அடுத்த நிதியாண்டில் தயாரிப்பு பணி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை ஐ.சி.எஃப் அதிகாரிகள், “சென்னை ஐ.சி.எஃப்-ல் தற்போது நவீன வகையான ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. மேலும், ஏசி மின்சார ரயில் தயாரிப்பு பணியும் நடைபெறுகிறது. இது, வந்தே பாரத் போல இருப்பதால், ரயிலில் ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை எளிதாக சென்று வர இயலும். அதிகபட்சமாக, மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் உடையது. தானியங்கி கதவுகள், ஜிபிஎஸ் அடிப்படையிலான தகவல் வசதி மற்றும் அறிவிப்பு வசதிகளும் உள்ளன. அனைத்துப் பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக, இந்த வகை ஏசி மின்சார ரயில்கள் அதிகளவில் தயாரிக்கப்படவில்லை. இந்த நிதியாண்டில் மும்பை ரயில்வே கோட்டத்துக்கு நான்கு ஏசி மின்சார ரயில்களை தயாரித்து வழங்க, ஐ.சி.எஃப்-க்கு ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, முதல் ஏசி ரயில் தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள 3 ஏசி ரயில்களை தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. இதையடுத்து, சென்னைக்கு ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு ஏசி ரயில்களை தயாரிக்கும் பணியை அடுத்த நிதியாண்டில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.” என்று கூறினர்.