பாலமு (ஜார்க்கண்ட்): தேர்தல் பிரச்சாரங்களின்போது ராகுல் காந்தி காட்டும் அரசியல் சாசன புத்தகம் போலியானது; அதன் உள்ளே எதுவுமே இல்லை என பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பாலமு நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, “தேர்தல் பிரச்சாரங்களின்போது ராகுல் காந்தி அரசியல் சாசன புத்தகத்தைக் காட்டுகிறார். ஆனால், அந்த புத்தகம் உண்மையில் அரசியல் சாசன புத்தகம் அல்ல. இவ்விஷயத்தில் இரண்டு நாட்களுக்கு முன் அவர் அம்பலமானார்.
ராகுல் காந்தி காட்டும் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தின் பிரதி ஒன்றை ஒருவர் பெற்றுள்ளார். எந்த உள்ளடக்கமும் இல்லாத அந்த புத்தகத்தின் அட்டையில் இந்திய அரசியலமைப்பு என்று எழுதப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அரசியலமைப்புச் சட்டத்தை கேலிக்கூத்தாக்காதீர்கள். இது அரசியல் சாசனத்தின் நம்பிக்கை பற்றியது. அரசியல் சட்டத்தின் போலி பிரதியை காட்டுவதன் மூலம் நீங்கள் அம்பேத்கரையும், அரசியல் நிர்ணய சபையையும் அவமதித்து விட்டீர்கள். காங்கிரஸ் கட்சி அரசியலமைப்பை கேலிக்கூத்தாக்கியுள்ளது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 26-ம் தேதியை அரசியலமைப்பு தினமாகக் கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளார்.
ஓபிசி, பழங்குடியினர் மற்றும் தலித்துகளின் இடஒதுக்கீட்டைப் பறிக்கும் கெட்ட நோக்கம் காங்கிரஸுக்கு உள்ளது. ஓபிசி ஒதுக்கீட்டிற்கு காங்கிரஸ் எதிரானது. மகாராஷ்டிராவில் உலமாக்களின் பிரதிநிதிகள் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தபோது, சிறுபான்மையினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதாக அக்கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது.
காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. உங்களின் நான்காவது தலைமுறை கூட, சட்டப்பிரிவு 370ஐ மீண்டும் கொண்டு வர முடியாது என்று ராகுல் காந்தியை நான் எச்சரிக்கிறேன். ஜார்க்கண்டில் உள்ள ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான அரசு, நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்த அரசாக உள்ளது” என தெரிவித்தார்.
81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. நவம்பர் 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.