Mura Review: அதே நட்பு, துரோகம், அதிரடி; இந்த மலையாள `சுப்ரமணியபுரம்' மிரட்டுகிறதா?

உள்ளூர் தாதா அனி (சுராஜ் வெஞ்சரமூடு) அந்த ஊரில் செல்வாக்காக இருக்கும் தொழிலதிபரான ரெமாவுக்காக (மாலா பார்வதி) அடியாள் வேலை செய்கிறார். அவரிடம் வேலை வெட்டிக்குச் செல்லாமல் தான்தோன்றித்தனமாகச் சுற்றித் திரியும் இளைஞர்களான ஆனந்து, சஜி, மனு, மனாஃப் என்கிற நால்வர் கூட்டணி வந்து சேருகிறது. ஆரம்பத்தில் ஒரு குவாரி பிரச்னையில் அனிக்காக அடிதடி சண்டையில் இறங்கும் இவர்கள், பின்னாட்களில் அவரிடமிருந்து வருகிற ஒரு அசென்மென்டை கையில் எடுக்கிறார்கள். அது மதுரையில் கோடிக் கணக்காக இருக்கும் கறுப்புப் பணத்தைக் கொள்ளையடிப்பதே! இதை அவர்கள் வெற்றிகரமாகச் செய்தார்களா, இந்த அடிதடி சகவாசம் அவர்கள் வாழ்வை எப்படி மாற்றியது என்பதை ரத்தம் கொப்பளிக்க, நட்பு தெறிக்கக் கொடுத்திருப்பதே இந்த `முரா’.

Mura Review

போலீஸ் ஸ்டேஷனில் வாங்கிய அடியை வாடகைக்கு விட்டது போல விறைப்பாக நிற்பது, கொள்ளையடிக்கப் போன இடத்தில் நாயைக் கண்டு பதற்றம், நட்பு, காதல் சோகம், ஆத்திரம் என ‘அடேங்கப்பா நாலு பேரு’ ரகத்தில் ‘ரக்கட்’ பாய்ஸாக பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள் ஹிருது ஹாரூன், ஜோபின் தாஸ், அனுஜித் கண்ணன், யேது கிருஷ்ணா. குறிப்பாகக் கையறுநிலையைப் பிரதிபலிக்கும் இடத்தில் ஹிருது ஹாரூனும், குற்றவுணர்ச்சியைக் காட்டும் இடத்தில் ஜோபின் தாஸும் வலுவாக ஸ்கோர் செய்திருக்கிறார்கள். வில்லத்தனத்தை நுண்ணுணர்வு பாணியில் அற்புதமாகக் கையாண்டிருக்கிறார் சுராஜ் வெஞ்சரமூடு. ஒருசில இடங்களில் கணிக்கமுடியாத பாவனைகளால் கணிக்கக்கூடிய காட்சிகளின் மீது நமக்கிருக்கும் அதிருப்தியைச் சற்றே மாற்ற முயல்கிறார். கனி குஸ்ருதியின் நடிப்பை வீணடித்திருக்கிறார்கள். எதற்காக அந்த கதாபாத்திரம் என்கிற தெளிவின்மை படம் நெடுகிலும் இருக்கிறது. எதிர்மறை நிழலினை நெடுகிலும் பரவ விடுகிறார் மாலா பார்வதி. அவரது மகனாக நடித்துள்ளவர் ‘அவரைப் பார்த்தாலே கோவம் வருகிற’ அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தி வெறுப்பைச் சம்பாதிக்கிறார்.

முட்புதருக்குள் சுற்றித் திரியும் பதைபதைப்பு, பரபரப்பான சேசிங் என நேர்த்தியான கேமரா கோணங்களால் கவர்கிறார் ஒளிப்பதிவாளர் பாசில் நாசர். குறிப்பாக பிசி ஸ்டண்ட்ஸின் சண்டைக் காட்சி வடிவமைப்புக்கு நியாயம் செய்திருக்கிறது ஒளிப்பதிவு. பல காட்சிகளில் உணர்வுகளை உயர்த்தும் வேலையைச் செய்திருக்கிறது கிறிஸ்டி ஜோபியின் பின்னணி இசை. பாடல்கள் கதையின் போக்கிலேயே இருப்பதால் எந்த துருத்தலும் இல்லாமல் நகர்கிறது. இறுதி காட்சியின் ‘பீக்’ அனுபவத்தை முதலிலேயே தூக்கி வைக்கும் முடிவை இயக்குநரோ, படத்தொகுப்பாளரோ யார் எடுத்திருந்தாலும் அது பெரிய மைனஸாகத் துரத்துகிறது. இரண்டாம் பாதியின் நீளத்தை இன்னுமே சுருக்கியிருக்கலாம்.

Mura Review

ஆரம்பத்திலேயே ஒரு கொலை, அதற்கு முன்பு என்ன நடந்தது என்பதாக பிளாஷ்பேக்கில் நகர்கிறது கதை. படிப்பைப் பாதியிலே நிறுத்திய நான்கு இளைஞர்கள் எப்படி தாதா குழுவில் இணைந்து உருப்படாமல் போகிறார்கள் என்பதைச் சுத்தி சுத்தி எடுக்கப்பட்ட திரைக்கதை, ஒரு புள்ளியில் கதையின் இலக்கான கொள்ளைக்கு வந்து நிற்கிறது. படத்தின் முக்கிய தூண்களாக இருக்க வேண்டிய மதுரைக்கார நட்பு காட்சிகளில் இன்னும் அழுத்தம் இருந்திருக்கலாம். ஏனெனில் அவர்கள் ஏன் இவர்களுக்கு உதவ வேண்டும், இவர்களை ஏன் நம்ப வேண்டும் என்கிற கேள்விகள் தொக்கி நிற்கின்றன. நான்கு கதாபாத்திரங்களின் மீதும் சோக இசை வாசிக்கும் இடத்தில், அவர்கள் பாவம் எனத் தோன்றும் வண்ணம் காட்சிகள் அமையவில்லை. ஏனெனில் வில்லன்கள் நல்லவர்களா, தீயவர்களா என்ற புதிர் பெரிய மைனஸாக மாறுகிறது.

இரண்டாம் பாதியில் கதைக்களம் ஓர் எல்லைக்கு மேல் ‘கத்தி, ரத்தம், குத்து’ ரீப்பிட் என்கிற சுழற்சிக்குள் சென்று அயற்சியை ஏற்படுத்துகிறது. இருப்பினும் ‘காலில் விழு’ என்கிற காட்சியை வடிவமைத்த விதத்தில் அட்ரலினை பம்ப் அடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் முகமது முஸ்தப்பா. ஆனால் அந்த வேகம் அடுத்தடுத்த காட்சிகளில் மிஸ்ஸிங் சேட்டா! அதேபோல கதையின் மையக்கரு ஆங்காங்கே நமக்கு ‘சுப்ரமணியபுரம்’ படத்தினையும் ஞாபகப்படுத்துகிறது. மேலும் அடுத்து இதுதான் நடக்கும் என்பதை எளிதாகக் கண்டுபிடிக்க முடிவதுகூட பரவாயில்லை என்று விட்டாலும், இறுதியில் என்ன நடக்கப்போகிறது என்பதை இரண்டாம் பாதியின் தொடக்கத்திலேயே கண்டுபிடிக்க வைத்த திரைக்கதை படத்தின் சுவாரஸ்யத்தைக் குறைத்திருக்கிறது.

Mura Review

சிறப்பான மேக்கிங், தேர்ந்த நடிப்பு ஆகியவை இருந்தாலும் சில பல குறைகளுடன் இருக்கும் இந்த `முரா’, இன்னும் முறையாக எழுதப்பட்டிருக்கலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.