இமாச்சல பிரதேச முதல்வருக்காக வாங்கி வரப்பட்ட சமோசாக்கள் மாயமானது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு கடந்த மாதம் 21-ம் தேதி சிம்லாவில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்தார். அப்போது முதல்வர், அரசு அதிகாரிகளுக்கு வழங்குவதற்காக சமோசாக்கள் வாங்கி வருமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. அப்போது முதல்வருக்கு என வாங்கி வரப்பட்ட 3 பெட்டிகளில் அடங்கிய சமோசாக்கள் முதல்வருக்கு வழங்கப்படவில்லை என தெரியவந்துல்ளது.
இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: முதல்வர் சுக்விந்தர் சிங்குக்கு சமோசாக்கள் வாங்கி வருமாறு சப்-இன்ஸ்பெக்டருக்கு போலீஸ் ஐஜி உத்தரவிட்டிருந்தார். லக்கர் பஜாரில் உள்ள ஓட்டல் ரேடிசன் புளூவிலிருந்து 3 பாக்கெட்களில் சமோசா கொண்டு வரப்பட்டது. இந்த சமோசாக்களை உதவி சப்-இன்ஸ்பெக்டர் (ஏஎஸ்ஐ) வாங்கி வந்தார்.
இந்த சமோசாக்கள், முதல்வருக்காக மட்டுமே என்று சப்-இன்ஸ்பெக்டருக்கு மட்டுமே தெரியும். ஆனால், சமோசா வாங்கி வந்த ஏஎஸ்ஐ, அவற்றை சிற்றுண்டிகளை உயர் அதிகாரிகளுக்கு விநியோகம் செய்யும் மெக்கானிக்கல் டிரான்ஸ்போர்ட் (எம்டி) பிரிவு ஊழியர்களிடம் ஒப்படைத்துள்ளார். இவ்வாறு இந்த சமோசா பெட்டிகள் கைமாறி, மாறிச் சென்று முதல்வருக்கு வழங்கப்படாமல் போய்விட்டது. கடைசியாக இந்த சமோசாக்கள், அங்கு காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விவரம் தெரியவந்துள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை போலீஸ் எஸ்.பி நடத்திய விசாரணையில் இது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக எம்டி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியபோது, 3 பெட்டிகளில் இருந்த சமோசாக்கள் யாருக்கு வாங்கப்பட்டது என்று தெரியவில்லை என்றும், வழக்கமான உணவு மெனுவில் சமோசாக்கள் இடம்பெறவில்லை என்றும் தெரிவித்தனர். ஆனால் இதுதொடர்பாக சிஐடி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடவில்லை என்றும், காவல்துறை அளவிலான உள்விசாரணை மட்டுமே நடத்தியதாகவும், இந்த விவகாரத்தை எதிர்க்கட்சியான பாஜக ஊதி பெரிதாக்குகிறது என்றும் ஆளும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இமாச்சல் பிரதேச போலீஸ் டிஜிபி சஞ்சீவ் ரஞ்சன் கூறும்போது, “இதுதொடர்பாக சிஐடி விசாரணைக்கு அரசு உத்தரவிடவில்லை. காவல்துறை மட்டத்தில் விசாரணை நடத்தப்பட்டது” என்றார்.
இதுகுறித்து பாஜக எம்எல்ஏ சத்பால் சிங் சத்தி கூறும்போது, “அரசின் நலத்திட்டங்கள் குறித்து காங்கிரஸ் அரசு இங்கு கவலைப்படுவதில்லை. ஆனால் காணாமல் போன சமோசாக்கள் என்னவாயிற்று என்பது குறித்து தீவிர விசாரணை நடத்துகிறார்கள். அரசு ஊழியர்களுக்கு தாமதமாகத்தான் ஊதியம் செலுத்தப்படுகிறது. ஆனால் அதுகுறித்து அரசு கவனம் செலுத்துவதில்லை. சமோசாக்கள் மாயமானது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் கூட விசாரணை நடத்தியுள்ளனர்” என்றார்.