ICC Champions Trophy 2025 Latest News Updates: கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஐசிசி தொடர் என்றால், அடுத்தாண்டு பிப்ரவரி – மார்ச் மாதங்களில் நடைபெற இருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர். இந்த தொடர் 2017ஆம் ஆண்டுக்கு பின்னர் ஐசிசியால் கைவிடப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் 7 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற இருக்கிறது. மேலும் இந்த தொடரின் மீது அதிக எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணம், அது பாகிஸ்தானில் நடைபெற இருந்ததுதான். இந்தியா அங்கு 15 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதில்லை. அதனால் இம்முறை அங்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளுமா அல்லது இந்திய அணி மட்டும் வெளிநாடுகளில் தனது போட்டியை விளையாடுமா என பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
அந்த வகையில், இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரை விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்லாது என அதிகாரப்பூர்வமாக ஐசிசி மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இதுன் மூலம் ஐசிசி இந்த தொடரை ஹைபிரிட் முறையில் நடத்த இருப்பதாகவும், இந்திய அணி விளையாடும் போட்டிகள் துபாயில் நடைபெற வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஒருவேளை இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றால், அதுவும் துபாயில்தான் நடைபெறும் என கூறப்படுகிறது. ஹைபிரிட் முறை கடைபிடிக்கப்பட்டாலும் தொடரை நடத்துவது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்தான்.
ஐசிசி முடிவுக்கு பாகிஸ்தானின் பதில் என்ன?
ஒருவேளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியின் இந்த முடிவுக்கு ஒத்துழைக்காவிட்டால் ஐசிசி, இந்த தொடரில் முக்கிய முடிவை எடுக்கும் எனவும் தகவல்கள் கசிந்துள்ளன. அதாவது, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை முழுவதுமாக பாகிஸ்தானில் இருந்து நீக்கவிட்டு, வேறு ஒரு நாட்டில் நடத்தும் முடிவை எடுக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இது பாகிஸ்தானுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதில் தங்களின் நிலைப்பாட்டை அறிவிக்கும் முன்னர் அவர்களின் அரசுடன் கலந்தாலோசித்து வருகின்றனர். இந்தியாவின் பிடிவாதத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அவர்களுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்வது மட்டுமின்றி இனி எந்த ஐசிசி தொடர்களிலும் இந்தியா உடன் மோத மாட்டோம் என நிலைப்பாட்டை பாகிஸ்தான் எடுக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
தென்னாப்பிரிக்காவில் சாம்பியன்ஸ் டிராபி
பாகிஸ்தான் ஒருவேளை ஐசிசியின் ஹைபிரிட் முறைக்கு ஒப்புக்கொள்ளாவிட்டால் வரும் பிப்ரவரி – மார்ச் மாதங்களில் பாகிஸ்தான் நாட்டில் நடைபெற இருந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் அப்படியே தென்னாப்பிரிக்கா நாட்டுக்கு மாற்றப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து ஐசிசி தரப்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 2027 ஐசிசி உலகக் கோப்பை தொடரை தென்னாப்பிரிக்காவே நடத்த இருப்பதால், இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் அங்கேயே நடத்திவிடலாம் என ஐசிசி திட்டமிடுவதாக கூறப்படுகிறது.
1996க்கு பின் முதல்முறையாக…
இந்திய அணி 2008ஆம் ஆண்டு ஆசிய கோப்பை முதல் பாகிஸ்தானில் சுற்றுப்பணம் மேற்கொள்வதை தவிர்த்து வருகிறது. 2023ஆம் ஆண்டிலும் ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில்தான் நடைபெற்றது. ஆனால் அதுவும் ஹைபிரிட் முறை பின்பற்றப்பட்டது. இந்திய அணியின் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடந்தாலும், பாகிஸ்தான்தான் அந்த தொடரின் ஹோஸ்ட்டாக இருந்தது. 1996ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை தொடருக்கு பிறகு முதல்முறையாக தற்போதுதான் பாகிஸ்தானில் ஐசிசி தொடர் நடைபெற இருக்கிறது. 2011ஆம் ஆண்டில் இந்தியா, வங்கதேசத்துடன் பாகிஸ்தானும் ஐசிசி உலகக் கோப்பை தொடரை நடத்த இருந்த நிலையில், 2008 மும்பை தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தான் மட்டும் ஐசிசியால் விலக்கிக்கொள்ளப்பட்டது.