எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் என்றாலே விடாது கருப்பு, மர்ம தேசம், இறையுதிர்க்காடு என அவருடைய அமானுஷ்யக்கதைகளும், ஆன்மிகக்கதைகளும்தான் நம் அனைவருடைய நினைவுக்கும் வரும்.
இரண்டு நாள்களுக்கு முன்னால், 65 வயதிலேயே அவர் திடீரென மரணமடைந்தது பலருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ‘இந்திரா செளந்தர்ராஜனின் இழப்பை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை’ என ஃபேஸ்புக்கில் பலரும் தங்களுடைய வருத்தத்தைப் பகிர்ந்துகொள்ள, எழுத்தாளர் ‘பட்டுக்கோட்டை பிரபாகர்’, ”வித்தியாச அமானுஷ்ய எழுத்துக்குச் சொந்தக்காரர். மேடைப் பேச்சிலும் பின்னியெடுப்பவர். பக்தி இலக்கியத்திற்கும் அதிகமாகப் பங்களிக்கத் துவங்கியவர். இதெல்லாம் சமூகத்திற்கு. எனக்கு இனிய நண்பர். ஒவ்வொரு போனிலும் அரை மணி நேரத்திற்குக் குறையாமல் பேசுவோம். உங்களை இத்தனை சீக்கிரம் இழப்போம் என்று நினைக்கவே இல்லை. இன்னும் நம்பமுடியவில்லை இந்திரா… இரங்கல் சொல்லவும் மனசு வரவில்லை” என்று பதறியிருந்தார்.
ஓவியர் ஷ்யாமோ, ”நீலவானுக்கு விரைந்து செல்லத் தான் நீல சரஸ்வதி நாவல் எழுதினீர்களா… அட்டைப்பட ஓவியத்திற்கு அத்தனை மணி நேரம் பாராட்டினீர்களே; அப்போதும் எனக்குத் தெரியாது, இதுதான் நான் உங்களுக்கு வரையும் கடைசி ஓவியம் என்று… இனி யார் எனக்குத் தினமும் காலை 11 மணிக்குப் பேசுவார்கள்” என்று கண்ணீர் வரவழைக்கும் பதிவை இட்டிருந்தார்.
எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜனின் குடும்பத்தினருடன் பேசுவதற்காக போன் செய்தோம். போனை எடுத்தது அவருடைய இளைய மகள். அவரால், கண்ணீரைத்தாண்டி எதுவுமே பேச முடியாததால், ”நீங்க என் அக்காகிட்ட பேசுங்க” என்றார். மூத்த மகள் ஐஸ்வர்யா நம்மிடம் பேசினார்.
”அப்பா குளிச்சிட்டு இருந்தப்போ மைல்டா கார்டியாக் அட்டாக் வந்திருக்கு. அதனால, அப்படியே மடிஞ்சு கீழே உட்கார்ந்திட்டிருக்கார். அம்மா அந்த நேரத்துல வெளியே இருந்ததால, பாத்ரூம்ல இருந்து வந்த எந்த சத்தமும் அவங்க காதுகளுக்கு எட்டலை. ஆனா, குளிக்கப்போனவர் ரொம்ப நேரமா வெளியே வரலையேன்னு சந்தேகப்பட்டு அம்மா கதவைத் தட்டியிருக்காங்க. அப்பாகிட்ட இருந்து எந்த பதிலும் வராததால, அக்கம் பக்கத்துல இருந்தவங்களை உதவிக்குக் கூப்பிட்டு இருக்காங்க. அவங்க வந்து கதவை உடைச்சுப் பார்த்தா, அப்பா பேச்சில்லாம தரையில சரிஞ்சு கிடந்திருக்கார். ஆனா, அந்த நேரத்துலகூட அப்பாவோட நாடி துடிச்சிட்டுதான் இருந்திருக்கு. உடனடியா ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டுப் போயிருக்காங்க அம்மா. போற வழியிலேயே பல்ஸ் டவுன் ஆக ஆரம்பிச்சிருக்கு. ஹாஸ்பிடல் போயி செக் பண்ணிப் பார்க்கிறப்போ அப்பா எங்களையெல்லாம் விட்டுட்டு ரொம்ப தூரம் போயிட்டாருன்னு தெரிஞ்சிது.
நான் கல்யாணமாகி ராஜஸ்தான்ல இருக்கேன். இது நடந்தப்போ, என்னோட தங்கை என் வீட்டுக்கு வந்திருந்தாங்க. அதனால, நாங்க ரெண்டு பேருமே அன்னிக்கு வீட்ல இல்ல.
அப்பா, எந்த விஷயத்தையும் ரொம்ப கூர்மையா கவனிக்கக்கூடியவர். எங்க குடும்பத்துக்குள்ளேயே சமீபத்துல படுக்கையில இருந்த பலரோட கஷ்டங்களையும், வெளிநாட்ல இருக்கிற அவங்க குழந்தைகளால பேரண்ட்ஸை பார்க்க முடியாம தவிக்கிறதையும் கவனிச்சிட்டே இருந்தார். அதெல்லாம் அப்பாவை ரொம்ப பாதிச்சிது.
சமீபத்துல எங்க தாத்தா (அம்மாவோட அப்பா) தன்னோட 97 வயசுல இறந்தார். தாத்தாவுக்கு பிபி, சுகர்னு எந்தப் பிரச்னையுமே கிடையாது. அவரோட எல்லா வேலைகளையும் அவரே தான் பார்த்துப்பார். அப்படிப்பட்டவர், லேசா தடுக்கி விழுந்ததுல எலும்பு உடைஞ்சு, படுத்தப்படுக்கையா இருந்தது அப்பாவை ரொம்பவே பாதிச்சது. ‘கடைசி வரைக்கும் எழுதணும். நம்ம வேலையே நாமளே செஞ்சுக்கிற மாதிரி ஆரோக்கியமா இருக்கணும்னு அடிக்கடி சொல்லிட்டே இருப்பார். அவர் ஆசைப்பட்ட மாதிரியேதான் இருந்தார்” என்றவர் கட்டுப்படுத்த முடியாமல் விசும்பினார்.